கிறிஸ்தவ ஆலய சொத்து: பதிவுத்துறை சட்டத்தின் கீழ் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது - மதுரை ஐகோர்ட்டு

கிறிஸ்தவ ஆலயங்களின் சொத்துகளை பதிவுத்துறை சட்டத்தின் கீழ் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரை,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ஷாலின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த ஆண்டு விஜயா என்பவரிடம் இருந்து சொத்து கிரையம் செய்தேன். அந்த சொத்தை பதிவு செய்ய திருப்பத்தூர் சார்பதிவாளர் மறுத்துவிட்டார். இது தொடர்பாக சார்பதிவாளர் 29.3.2023 அன்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நான் வாங்கிய சொத்தை உடனடியாக பத்திரப்பதிவு செய்யும்படி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பத்தூர் சார்பதிவாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், 2017-ம் ஆண்டில் 2 வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தமிழ் இவாஞ்சலிக்கல் லூத்தரன் சர்ச் (டி.இ.எல்.சி.) சொத்துகளை ஐகோர்ட்டு அனுமதி இல்லாமல் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட்டது. இது தொடர்பாக பதிவுத்துறை ஐ.ஜி. சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன் அடிப்படையில் மனுதாரரின் சொத்து பதிவு மனு நிராகரிக்கப்பட்டது" என கூறப்பட்டு இருந்தது.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "தமிழில் `சிவன் சொத்து குலநாசம்' என்பார்கள். அதாவது `கோவில் சொத்துக்களை அபகரித்தால் குடும்பம் அழிந்துவிடும்' என்பது அதன் அர்த்தம். இந்து, முஸ்லிம் மதங்களின் சட்டப்படியான சொத்துக்களை பதிவுத்துறை சட்டம் பாதுகாக்கிறது. அந்த பதிவுத்துறை சட்டத்தில் கிறிஸ்தவ ஆலய சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.

கோவில் சொத்துகள் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படியும், வக்பு வாரிய சொத்துகள் வக்புவாரிய சட்டப்படியும் பாதுகாக்கப்படுகின்றன. கிறிஸ்தவ ஆலய சொத்துகளை பொறுத்தவரை இதுபோன்ற சட்டம் இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியா மதசார்பற்ற நாடு என்பதால் அனைத்து மதங்களையும் சமமாக அணுக வேண்டும். இதனால் கிறிஸ்தவ ஆலய சொத்துகளை பதிவுத்துறை சட்டம் 22-ஏ பிரிவின் கீழ் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது.

டி.இ.எல்.சி. சொத்து வழக்கில் பிரதான வழக்கு வாபஸ் பெறப்பட்டு உள்ளது. இதனால் அதுதொடர்பான வழக்கின் இடைக்கால உத்தரவுக்கு உயிர் இல்லை. எனவே தற்போது டி.இ.எல்.சி. சொத்துகளை பொறுத்தவரை பத்திரப்பதிவு செய்ய எந்த தடையும் இல்லை. மனுதாரர் சொத்தை பதிவு செய்ய மறுத்த திருப்பத்தூர் சார்பதிவாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com