கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் ஊர்வலம்

குருத்தோலை ஞாயிறையொட்டி வேலூர் மற்றும் குடியாத்தத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் ஊர்வலம்
Published on

குருத்தோலை ஞாயிறு

கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு (உயிர்ப்பு பெருநாள் விழா) முன்பு அனுசரிக்கும் தவக்காலமான சாம்பல் புதன் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி தொடங்கியது. ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிரிழக்கும் சில நாட்களுக்கு முன்பாக அவர், ஒரு கழுதை குட்டியின் மீது அமர வைக்கப்பட்டு ஜெருசலேம் நகர வீதிகளில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது சாலையோரங்களில் பொதுமக்கள் நின்றுகொண்டு ஒலிவ மரக்கிளைகளை கைகளில் ஏந்தியபடி, "ஓசன்னா தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, ஓசன்னா... ஓசன்னா" என்று ஆர்ப்பரித்தனர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை 'குருத்தோலை ஞாயிறு' ஆக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று 'குருத்தோலை ஞாயிறு' நிகழ்ச்சி நடந்தது.

கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

இதையொட்டி வேலூர் அண்ணாசாலையில் உள்ள சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் இருந்து குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் தொடங்கியது. கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலையை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியபடி சென்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை அடைந்தது. பின்னர் வேலூர் பேராயர் சர்மா நித்யானந்தம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதேபோல் வேலூர் விண்ணரசி மாதா தேவாலயம், ஓல்டுடவுன் ஆரோக்கிய மாதா தேவாலயம், காட்பாடி, சதுப்பேரி சி.எஸ்.ஐ. தேவாலயங்கள் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலமும், அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம்

குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. நல்மேய்ப்பர் ஆலயத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பிரார்த்தனையில் அதிகாலை முதலே ஏராளமான கிறிஸ்தவர்கள் திரண்டனர். தொடர்ந்து ஆயர் நோவாஜேம்ஸ் தலைமையில் சபை செயலாளர் சி.சுதாசந்தர், பொருளாளர் ஜெ.ஜோன்ஸ் ஆனந்தகுமார் மற்றும் திருச்சபை மக்கள் கலந்து கொண்ட குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நல் மேய்ப்பர் ஆலயத்தை அடைந்தது. பின்னர் சிறப்பு பிரார்த்தனைக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் நகரின் பல பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும், சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு ஊர்வலமும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com