கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை: கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் திருவிழா உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களையொட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னை,
சென்னையில் வேலை பார்த்துவரும் வெளியூரை சேர்ந்த மக்கள், பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், பள்ளி அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு பயணிகள் அதிக எண்ணிக்கையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால், ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் வழக்கத்தைவிட நேற்று இரவு ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இடம் கிடைக்காமல் படிக்கட்டு வரை தொங்கியபடி ஆபத்தான பயணத்தை பயணிகள் மேற்கொண்டதையும் பார்க்க முடிந்தது.
சென்னை கிளாம்பாக்கத்திலும் பயணிகள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. பெரும்பாலான பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்து பயணித்ததால் கடைசி நேரத்தில் திட்டமிட்டு பயணித்த பயணிகள், பேருந்துகளில் இடம் பிடிப்பதற்குள் கடும்பாடு பட்டன. திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகளையும் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகம் இயக்கியது. தனியார் ஆம்னி பஸ்களில் வழக்கம் போல கட்டணம் கடுமையாக உயர்ந்து இருந்தது. சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு ரூ.1,900 முதல் ரூ.4,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.






