இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
Published on

சென்னை,

ஏசு கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் இன்று அதிகாலையில் எழுந்து, புத்தாடைகளை அணிந்து ஆலயங்களுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்பார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களை முன்னிட்டு தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஏழைகளையும், எளிய மனத்தோரையும், கைவிடப்பட்டோரையும் இறைவனின் பிள்ளைகள் நீங்கள் என்று வாஞ்சையோடு அரவணைத்து மானிட இனம் நல்வழியில் வாழ, புதிய ஏற்பாடுகளை போதித்த ஏசு கிறிஸ்து, தன் போதனைகளாலும், வாழ்ந்து காட்டிய நெறிகளாலும், நம் அனைவரின் வணக்கத்திற்குரியவராகத் திகழ்கிறார். ஏசுபிரான் போதித்த அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவம், பகிர்ந்து வாழ்தல் என்னும் உயரிய நெறிகளை வாழ்வில் நாமும் கடைபிடிக்க உறுதி ஏற்போம்; அதுவே உண்மையான கிறிஸ்துமஸ் வழிபாடு. கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாகக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு; புதிதாகப் பிறக்கவுள்ள ஆண்டில் மகிழ்ச்சியும், அமைதியும் பொங்கிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து மகிழ்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உங்கள் பகைவரிடமும் அன்பு காட்டுங்கள் என்ற போதனையின் மறு உருவமாக வாழும் கிறிஸ்தவ மக்களின் சமுதாயப் பணிகளை, அவர்கள் ஆற்றிவரும் அரும்பணிகளை, யாரும் மறந்திட இயலாது. கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த நேரங்களில் எல்லாம் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தியிருக்கிறார். அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக நிறைவேற்றியிருக்கும் திட்டங்கள் எண்ணிலடங்காதவை.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி, கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து, அவர்கள் அனைத்து வளங்களும் பெற்று நலம்நிறைந்த வாழ்வினைத் தொடர இதய பூர்வமாக வாழ்த்தி மகிழ்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் ஒற்றுமையோடும், அமைதியோடும், நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை உற்றார் உறவினர்களோடும், நண்பர்களோடும் கொண்டாட வேண்டுமென எனது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் நாட்டில் அமைதி நிலவ வேண்டும், போட்டி பொறாமைகள் அகல வேண்டும், ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். அதை நனவாக்க உழைப்போம் என ஏசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில், அனைவரும் உறுதி ஏற்போம். அனைவருக்கும் எனது வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் உயர்ந்த லட்சியங்களுக்காகப் போராடுகின்றவர்களுக்கு, சோதனைகளும் தோல்விகளும் அடுக்கடுக்காக வந்தாலும், அவற்றை நெஞ்சுறுதியோடு தாங்கிக் கொண்டு, நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில், விவிலியத்தில் சொல்லப்படுகின்ற வார்த்தைகளான, அவர் நியாயத்துக்கு வெற்றி கிடைக்கப் பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார் என்ற சொற்களை, மந்திரச் சொற்களாக மனதில் கருதி, தமிழ்நாட்டின் மறுமலர்ச்சிக்கும், தமிழ் ஈழ விடியலுக்கும் உறுதி எடுப்போமாக என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இந்தியாவில் வாழ்ந்து வருகிற சிறுபான்மையினத்தவருக்கு கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அச்சுறுத்தல் நிகழ்த்தப்பட்டு வருகிறது. என்றைக்கு மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததோ, அதுமுதற்கொண்டு சிறுபான்மை மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிற நிலை ஏற்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களுக்கு உரிய மரியாதையும், கவுரவமும் தந்து அனைவரையும் ஒன்றாக மதித்து நடத்திடும் நல்லரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஏற்பட ஏசு கிறிஸ்து அருள்பாலிக்கட்டும் என்று கூறியுள்ளார்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஏசு அழைக்கிறார் அமைப்பின் தலைவருமான பால் தினகரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் காதர் மொய்தீன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கோகுலம் மக்கள் கட்சி தலைவர் எம்.வீ.சேகர், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், தமிழக விழிப்புணர்வு கட்சி தலைவர் தியாகராஜன், ஜனநாயக ஜனதா தளம் தலைவர் ராஜகோபால், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் மணி அரசன்.

இந்திய தேசிய லீக் தேசிய பொதுச்செயலாளர் நிஜாமுதீன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில பொதுச்செயலாளர் தினகரன், கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் ஜோசப் பெர்னாண்டோ, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com