குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை 7-ம் தேதி திறப்பு

இந்த சுரங்கபாதையை இருவழிப் பாதையாக பயன்படுத்தும் வகையில் கார்கள் செல்லும் விதமாக இப்போது உருவாக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
குரோம்பேட்டையில் உள்ள ராதாநகர் மெயின் ரோடு ஜி.எஸ்.டி. சாலையுடன் இணைக்கும் முக்கிய பாதையாக உள்ளது. இந்த பாதை ரெயில்வே கேட்டை கடந்து செல்லும் வகையில் உள்ளதால் ரெயில்வே கேட் மூடப்படும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதை கருத்தில் கொண்டு கடந்த 2007-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. அப்போது பல்லாவரம் நகராட்சி தலைவராக இருந்த இ. கருணாநிதி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். இதை தொடர்ந்து ராதா நகர் சுரங்கப்பாதைக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.அதன்பிறகு ரெயில்வே பகுதியில் பணிகள் முடிந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவடையாமல் இழுபறியில் இருந்தது.
அ.தி.மு.க. ஆட்சியின் போது ராதாநகர் சுரங்கப் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி பலமுறை சட்டமன்றத்தில் பேசினார். சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.இதைத் தொடர்ந்து அ.தி. மு.க. ஆட்சியில் அந்த பகுதியில் சுரங்கப்பாதைக்கு தேவைப்படும் நிலங்களை நில ஆர்ஜிதம் செய்து இழப்பீடுகள் வழங்கி பணிகள் வேகப்படுத்தப் பட்டன.2019-ம் ஆண்டு சுரங்கப் பாதை திட்டத்திற்கான பணிகளை துவக்க வசதியாக 46 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
அதன் பிறகு நெடுஞ்சாலை துறை பணிகள் மிக மந்தமாக நடந்தது.பின்னர் இந்த சுரங்கபாதையை இருவழிப் பாதையாக பயன்படுத்தும் வகையில் கார்கள் செல்லும் விதமாக இப்போது உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் ஜி.எஸ்.டி. மெயின்ரோட்டில் கார்கள் திரும்புவதற்கு வசதியாக 3 அடி அகலம் 30 அடி நீளத்திற்கு இப்போது ரெயில்வே நிலம் ஒதுக்கி கொடுத்து உள்ளது. அதன் அடிப்படை யில் அனைத்து பணிகளும் நடந்து முடிந்து இப்போது திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.
15 ஆண்டு கால இழுபறிக்கு பிறகு ரூ.32 கோடி செலவில் உருவாக்கப்பட்டு உள்ள ராதா நகர் சுரங்கப் பாதை வருகிற 7-ந்தேதி (புதன்கிழமை) திறக்கப் அறிவிக்கப்பட்டு உள்ளது. 7-ந்தேதி மாலை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ராதாநகர் சுரங்கப் பாதையை திறந்து வைக்கிறார். அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்ட மன்ற உறுப்பினர் இ.கருணா நிதி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இதற்கான முன்னேற்பா டுகளை செய்து வருகின்றனர்.
இந்த சுரங்கப்பாதை திறக்கப்படுவதின் மூலம் குரோம்பேட்டை ராதாநகர், பாரதிபுரம், நெமிலிச்சேரி. அஸ்தினாபுரம் பகுதிகளை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைவார்கள்.






