மதபோதகர் குறித்து அவதூறு வீடியோ பதிவிட்டதாக சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது

சமூக வலைத்தளத்தில் மதபோதகர் குறித்து அவதூறு வீடியோ பரப்பிய வழக்கில் சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இந்து முன்னணி, பா.ஜ.க.வினர் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதபோதகர் குறித்து அவதூறு வீடியோ பதிவிட்டதாக சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது
Published on

நாகர்கோவில்:

சமூக வலைத்தளத்தில் மதபோதகர் குறித்து அவதூறு வீடியோ பரப்பிய வழக்கில் சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இந்து முன்னணி, பா.ஜ.க.வினர் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவதூறு வீடியோ பதிவு

சினிமா சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமான கனல் கண்ணன் சமீபத்தில் டுவிட்டர் பதிவில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். அதில், மத போதகர் அணியும் உடையுடன் வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர், இளம் பெண்ணுடன் நடனமாடும் வீடியோவும், அதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடலும் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் அதில் வெளிநாட்டு மத கலாசாரம் இது தான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஆஸ்டின் பெனட் (54) என்பவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதன் பேரில் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்து முன்னணி போராட்டம்

இந்தநிலையில் நேற்று காலை 10 மணிக்கு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு கனல் கண்ணன் ஆஜரானார். ஆனால் அங்கு விசாரணை தாமதமானது.

இதனை தொடர்ந்து அவருக்கு மதிய உணவு வழங்கவில்லை எனவும், விசாரணையை போலீசார் அதிக நேரமாக இழுத்தடிப்பதாக கூறி இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து திடீரென அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கலைந்து செல்லாமல் அங்கேயே காத்திருந்தனர்.

கனல் கண்ணன் கைது

இந்த பரபரப்புக்கு இடையே மாலை 6 மணி வரை கனல் கண்ணனிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை முடிவடைந்ததும் அவரை போலீசார் கைது செய்தனர்.

இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு அங்கு திரண்டிருந்த இந்து முன்னணி நிர்வாகிகளை அப்புறப்படுத்தினர். பின்னர் கனல் கண்ணனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் நாகர்கோவிலில் உள்ள 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மதபோதகர் பற்றி அவதூறு வீடியோ வெளியிட்டதாக கனல் கண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com