

சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் நின்று குடிமகன்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு 10 ரூபாய் வழங்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், ஆங்காங்கே திறந்திருந்த ஒரு சில டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட பல மடங்கு கூட்டம் அலைமோதியது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியில் திறந்திருந்த ஒரு டாஸ்மாக் கடையை நோக்கி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மதுப்பிரியர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் கடையின் முன் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
முரசு புயலின் தாக்கத்தால் சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) செங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்யது வந்தது. எனினும், மது வாங்குவதற்காக வரிசையில் நின்ற குடிமகன்கள் யாரும் மழையைக் கண்டு அஞ்சி வரிசையை விட்டு நகரவில்லை.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தங்களது கைகளில் குடைகளை விரித்துப் பிடித்தபடி நீண்ட வரிசையில் மிக ஒழுக்கமாக நின்று குடிமகன்கள் மது வாங்கிச் சென்றனர். "வெயிலோ, புயல் மழையோ... நாங்க வாங்காமல் போக மாட்டோம்" என்ற ரீதியில் செங்குன்றத்தில் அரங்கேறிய இந்த விசித்திரமான காட்சி, வீடியோவாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையில், அரசின் உத்தரவை மீறி தன்னிச்சையாக கடைகளை மூடி போராட்டம் நடத்திய ஊழியர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் சஸ்பெண்ட் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.