பயணியின் உயிர் காத்த பேருந்து ஊழியர்கள்: போக்குவரத்து அமைச்சர் நேரில் பாராட்டு!

பேருந்து ஊழியர்களின் மனிதாபிமான செயல்களைப் பாராட்டி அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களுக்கு சிறப்புப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
போக்குவரத்து துறை அமைச்சருடன் பேருந்து ஊழியர்கள்
போக்குவரத்து துறை அமைச்சருடன் பேருந்து ஊழியர்கள்
Published on

சென்னை,

பேருந்தில் பயணித்த பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய மாநகர பேருந்து ஊழியர்களை, போக்குவரத்து அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

வலிப்பு -மயக்கம்

மாநகரப் பேருந்து ஒன்று கடந்த ஜுன் 29-ந்தேதி மாலையில் திருவான்மியூரில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. அப்போது 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இரும்புலியூர் பேருந்து நிறுத்தத்தில் ஏறினார்.

பேருந்து பல்லாவரம் அருகே சென்றபோது அந்த பயணிக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. எனவே அவர் அங்குள்ள சக பயணிகளின் உதவியோடு தான் வைத்திருந்த மாத்திரையை உட்கொண்டார். ஆனால் அடுத்த சில நொடிகளில் மீண்டும் வலிப்பு ஏற்பட்டு அந்த பயணி பேருந்தின் உள்ளே மயங்கி விழுந்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

எனவே ஓட்டுநர் லட்சுமணன் சாதுர்யமாக செயல்பட்டு பயணிகளோடு பேருந்தை தாம்பரம் அரசு ஆஸ்பத்திரியை நோக்கி ஓட்டினர். ஆஸ்பத்திரியை அடைந்ததும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கீதர் இளையராஜா உள்பட சக பயணிகள் சிலர் அந்த பெண்னை ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். உடனடியாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதனால் அந்த பெண் சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பினார். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உயிர் தப்பினார்.

பாராட்டுச் சான்றிதழ்

இந்த சம்பவத்தை பொதுமக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

மேலும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இன்று (வியாழக்கிழமை) ஓட்டுநர் லக்ஷ்மணன் மற்றும் நடத்துநர் கீதர் இளையராஜா ஆகியோரை நேரில் அழைத்து அவர்களின் மனிதாபிமான செயல்களைப் பாராட்டி சிறப்புப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com