

சென்னை
ஆர்.கே.நகரில் ரூ.10 ஆயிரம் தருவதாக வாக்கு கொடுத்து அதற்காக 20 ரூபாயை டோக்கனாக தினகரன் ஆதரவாளர்கள் கொடுத்திருப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டது.
தி.மு.க. - பா.ஜனதா ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் வெளிப்படையாகவே தினகரன் மீது குற்றம் சுமத்தினர். இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் அது அடங்கி போய் காணப்பட்டது. இருப்பினும் தினகரன் பணம் கொடுத்தே ஆர்.கே.நகரில் ஜெயித்து விட்டார் என்கிற கருத்துக்கள் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
தினகரன் ஆதரவாளர்கள் வினியோகித்தாக கூறப்படும் 20 ரூபாய் டோக்கனை, ஆர்.கே.நகர் மக்கள் கையில் வைத்துக் கொண்டு ரூ.10 ஆயிரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தண்டையார் பேட்டை நேதாஜி நகர் பகுதியில் ரூ.10 ஆயிரம் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 20 ரூபாய் டோக்கனை எடுத்துக் கொண்டு சென்ற மக்களுக்கு அல்வா கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10 ஆயிரம் ரூபாய் பண்டலுடன் காரில் சிலர் காத்திருக்கிறார்கள் என்கிற தகவல் அப்பகுதி முழுவதும் தீயாக பரவியதை தொடர்ந்து ஆர்.கே.நகர் மக்கள் அப்பகுதிக்கு கூட்டமாக திரண்டு சென்றனர். காரில் இருந்தவர்கள் டோக்கனை வாங்கிக் கொண்டு, பெரிய பேப்பர் பண்டலை கையில் கொடுத்துள்ளனர்.
இதனை இங்கு வைத்து பிரிக்காதீர்கள். வீட்டுக்கு கொண்டு போய் பிரித்து பாருங்கள் என்று கூறியுள்ளனர். இதன்படி பார்சலை வாங்கியவர்கள் தங்களது வீடுகளுக்கு சென்று பிரித்து பார்த்தனர். அப்போது அதில் மஸ்கோத் அல்வா இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தேர்தல் முடிந்த பிறகும் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா விவகாரம் அல்வா ரூபத்தில் பூதாகரமாகவே வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#TTVDhinakaran / #RKNagarElection / #halawa