அமெரிக்க ராணுவம் கைப்பற்றிய பணத்தில் பங்கு தருவதாக கூறி தேனி ஓட்டல் ஊழியரிடம் ரூ.36 லட்சம் நூதன மோசடி

அமெரிக்க ராணுவம் கைப்பற்றிய பணத்தில் பங்கு தருவதாக கூறி தேனி ஓட்டல் ஊழியரிடம் ரூ.36 லட்சம் நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அமெரிக்க ராணுவம் கைப்பற்றிய பணத்தில் பங்கு தருவதாக கூறி தேனி ஓட்டல் ஊழியரிடம் ரூ.36 லட்சம் நூதன மோசடி
Published on

பேஸ்புக் பழக்கம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த ராமையா மகன் முருகானந்தம். இவர் சமையல் கலை படிப்பு படித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள நட்சத்திர உணவகத்தில் சில ஆண்டுகள் வேலை பார்த்து வந்தார். பின்னர் அவர் சொந்த ஊருக்கு வந்து விட்டார்.

இவர் தனது அக்காள் மகன் அஜீகண்ணன் என்பவருடைய பேஸ்புக் கணக்கை தனது செல்போனில் வைத்து பயன்படுத்தி வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த பேஸ்புக் கணக்கில், எமிலி ஜோன்ஸ் என்ற பெண்ணின் பெயரில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் தன்னை வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து முருகானந்தம் தனது வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து அந்த பெண் கூறிய வாட்ஸ்-அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.

அமெரிக்க ராணுவம் கைப்பற்றிய பணம்

அப்போது அந்த பெண், தான் அமெரிக்க ராணுவத்தில் செவிலியராக பணியாற்றி வருவதாகவும், சிரியா நாட்டின் மீது அமெரிக்க படை நடத்திய ஒரு மீட்பு பணியின் போது, சிரியா கலவரக்காரர்களிடம் இருந்து பெரும் தொகையை அமெரிக்க ராணுவம் கைப்பற்றியதாகவும், அந்த பணத்தை தங்கள் நாட்டின் வங்கிக் கணக்கில் சேர்க்க முடியாது என்பதால் அமெரிக்க ராணுவம் அந்த பணத்தை ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு பகிர்ந்து அளிக்க உள்ளதாகவும் கூறினார். மேலும், அமெரிக்க ராணுவத்தில் செவிலியராக பணியாற்றும் தன்னுடைய பங்காக 20 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 கோடி) கிடைக்கும் என்றும், அந்த பணத்தை தன்னால் பாதுகாப்பாக வைத்து இருக்க முடியாது என்பதால் தனக்கு தெரிந்த நம்பிக்கையான நபர் யாரிடமாவது கொடுத்து பாதுகாப்பாக வைக்க விரும்புவதாகவும் கூறினார்.

அதுபோல், இந்த பணத்தை பாதுகாப்பாக வைத்து இருந்தால் அந்த பணத்தில் 30 சதவீதம் தொகையை கமிஷனாக கொடுப்பதாகவும், அதற்கு விருப்பம் இருந்தால் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் அந்த பெண், முருகானந்தத்திடம் ஆசை வார்த்தைகள் கூறினார். 30 சதவீதம் என்றால் இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 கோடி கிடைக்கும்.

ரூ.36 லட்சம் மோசடி

இதை நம்பிய முருகானந்தம், அந்த பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க ஒப்புக் கொண்டார். பின்னர், அந்த பெண், முருகானந்தத்தின் விவரங்களை கேட்டு பெற்றுக் கொண்டு, ஏஜென்சி மூலம் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறினார். இதையடுத்து, முருகானந்தம் செல்போன் எண்ணுக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக மர்ம நபர் ஒருவர் பேசினார். அந்த நபர், எமிலி ஜோன்ஸ் என்ற பெயரில் ஒரு பார்சல் வந்துள்ளதாகவும், அதற்கு சுங்கத்துறை பரிசீலனை, தடையில்லா சான்று போன்றவை பெறுவதற்கான கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். இதையடுத்து அவர் கேட்ட தொகையை முருகானந்தம் அனுப்பி வைத்தார்.

அதன்பிறகு அந்த பணத்தை அவருடைய வங்கிக் கணக்கில் அனுப்புவது, அதற்கு இந்த பணம் பயங்கரவாத தொடர்பு எதுவும் இல்லை என்பதற்கான சான்று பெறுதல் போன்ற பல காரணங்களை கூறி வெவ்வேறு எண்களில் இருந்து முருகானந்தத்துக்கு அழைப்புகள் வந்தன. அதை நம்பிய அவரும் பல தவணையாக கேட்ட நபர்களுக்கு எல்லாம் அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பி வந்தார். அந்த வகையில் ரூ.36 லட்சத்து 31 ஆயிரத்து 16 செலுத்திய நிலையில், மேலும் அந்த மர்ம நபர்கள் சில காரணங்களை கூறி பணம் கேட்டனர்.

போலீஸ் விசாரணை

இதனால், தன்னை ஏமாற்றி ஒரு கும்பல் பணம் பறிப்பதை அவர் உணர்ந்தார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி விசாரணை நடத்தினார். பின்னர், இந்த நூதன மோசடி குறித்து சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் வழக்குப்பதிவு செய்தார்.

மோசடி நபர்கள் தொடர்பு கொண்ட 5 செல்போன் எண்கள், அவர்கள் பயன்படுத்திய 13 வங்கிக் கணக்கு எண்களை வைத்து சைபர் கிரைம் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com