திறப்பு விழாவுக்கு தயாராகும் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம்

திறப்பு விழாவுக்கு தயாராகும் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
திறப்பு விழாவுக்கு தயாராகும் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம்
Published on

வண்டலூர், 

சென்னை கோயம்பேடு மற்றும் சென்னை-திருச்சி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிமையாக பயணம் மேற்கொள்வதற்காக சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புறநகர் பஸ் நிலையம் கட்டுவதற்கு 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. தற்போது 99 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் பூங்கா உள்ளிட்ட சில இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் இறுதிக்கட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பஸ் நிலைய நுழைவாயில் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் பெயர் பொருத்தும் பணிகள், பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பஸ் நிலையத்திற்குள் கார், மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்கள், பயணிகள் தங்கும் அறைகள் போன்றவற்றை ஆய்வு செய்தார். பொதுமக்கள் வசதிக்காக பஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பஸ் நிலையத்தில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் கூடுதலாக மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மிக விரைவில் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்காக விழா மேடை அமைக்கும் இடத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com