கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் இடையே மோதல்: தாக்கப்பட்ட பிளஸ்-2 மாணவர் மூளைச்சாவு

தீவிர சிகிச்சை அளித்தும் மாணவர் கவியரசன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் கவியரசன் (17 வயது) . இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் இருதரப்பினர் இடையே பிரச்சினைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மாணவர் கவியரசன் மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பிளஸ்-1 மாணவர் ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக போலீசார் இருதரப்பு பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து கடந்த 3-ந்தேதி மதியம் மீண்டும் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 4-ந்தேதி மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு பள்ளியில் இருந்து கவியரசன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் அருகே சென்றபோது அங்கு வந்த பிளஸ்-1 மாணவர்கள், கவியரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் கவியரசனை பிளஸ்-1 மாணவர்கள் மரக்கட்டையால் தலையில் தாக்கினர். இதில் காயம் அடைந்த கவியரசனை சக மாணவர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கவியரசனை பரிசோதனை செய்தபோது அவருக்கு தலையில் ரத்தகசிவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. பின்னர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மாணவர் கவியரசன் உடல் நிலை மோசமானது.
தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் இருந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் மாணவர் கவியரசன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவர்கள் 15 பேரை நேற்று முன்தினம் கைது செய்து தஞ்சையில் உள்ள இளம் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தபள்ளியில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.






