10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் என்னென்ன..?

தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் மையத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

2025-26-ம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 10-ம் வகுப்புக்கான (எஸ்.எஸ்.எல்.சி. ) பொதுத்தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 25 ஆயிரத்து 801 பேரும், சிறைவாசித் தேர்வர்களாக 395 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 9 ஆயிரத்து 2 பேர் எழுத உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 219 தேர்வு மையங்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த தேர்வில் 12,292 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வுப் பணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், போதுமான அடிப்படை வசதிகள் தேர்வு மையங்களில் செய்துதரவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது.

தேர்வு பணியில் சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4,800-க் கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தேர்வு எழுதுவதற்கு தனி ஒரு அறையை ஏற்பாடு செய்திடவேண்டும். மருத்துவ உதவிகளுக்கு தேர்வு மையங்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனை, டாக்டர்களின் செல்போன், தொலைபேசி எண்களை முதன்மை கண்காணிப்பாளர்கள் வைத்துக்கொள்ளவேண்டும்.

மாணவர்களுக்கு வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் என்னென்ன..?

மாணவர்கள் தங்களுக்குத் தேவையான எழுதுபொருட்களைக் கொண்டு வருவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நீலம் அல்லது கருப்பு நிற மை பேனா (Ink pen) அல்லது ஜெல் பேனா, பென்சில், ரப்பர், நீளமான ஸ்கேல் மற்றும் ஒயிட்னருக்கு மாற்றாக 'பெலிகான்' ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். எக்ஸாம் பேட் (Exam Pad), எந்தவிதமான பவுச் (Pouch), வாட்டர் பாட்டில், ஒயிட்னர் (Whitner) மற்றும் கால்குலேட்டர் ஆகியவை தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

மாணவர்கள் பெல்ட் அணிவதைத் தவிர்க்க வேண்டும். காலணிகளைத் தேர்வு அறைக்கு வெளியிலேயே கழற்றி விட வேண்டும். சாதாரண முள் கடிகாரங்கள் (Analog Watch) அனுமதிக்கப்படும், ஆனால் டிஜிட்டல் கடிகாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் மையத்திற்கு வர வேண்டும். காலை 9:45 மணிக்கு மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். காலை 9:50 - 10 மணிக்கு மாணவர்கள் முன்னிலையில் வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு வழங்கப்படும். காலை 10 - 10:10 மணிக்கு வினாத்தாளை வாசிக்க நேரம் ஒதுக்கப்படும். இக்காலத்தில் வினாக்களில் ஏதேனும் தவறுகள் உள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும். காலை 10:15 - மதியம் 1:15 மணிக்கு தேர்வு எழுதும் நேரம். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் எச்சரிக்கை மணி அடிக்கப்படும்.

விடைத்தாளின் முதல் பக்கத்தில் உள்ள புகைப்படம், பெயர், பதிவு எண் மற்றும் பாடம் சரியாக உள்ளதா எனச் சரிபார்த்து, புகைப்படத்திற்குக் கீழே கையொப்பமிட வேண்டும். விடைத்தாளில் தேவையற்ற கிறுக்கல்கள் அல்லது அடையாளங்கள் எதையும் இடக்கூடாது. கூடுதல் வினாக்களுக்கு (Extra Questions) விடை எழுதுவதைத் தவிர்த்து, தேவையான எண்ணிக்கையிலான வினாக்களுக்கு மட்டும் துல்லியமாக விடை அளிப்பது நல்லது. தேர்வு முடிந்ததும் மீதமுள்ள காலிப் பக்கங்களைப் பென்சிலால் குறுக்காகக் கோடிட்டு அடிக்க வேண்டும்.

தேர்வு அறையில் சக மாணவர்களுடன் பேசுவதோ அல்லது பிட் (Bit) கொண்டு செல்வதோ 'மால் பிராக்டிஸ்' (Malpractice) எனக் கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வினாத்தாளில் எவ்வித குறிப்புகளையும் எழுதக்கூடாது. ஏதேனும் சந்தேகம் இருப்பின் அறைக் கண்காணிப்பாளரை அணுகலாம். இந்த விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதன் மூலம் மாணவர்கள் எவ்விதத் தடையுமின்றித் தேர்வை எழுதிச் சிறப்பான மதிப்பெண்களைப் பெற முடியும்.

பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை அனைத்து தேர்வு நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 9498383075, 9498383076 ஆகிய செல்போன் எண்களில் தெரிவித்து பயன்பெற கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com