

கொரடாச்சேரி:
திருவாரூர் அருகே புலிவலம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாஸ்கரன் (வயது 47). இவர் தனியார் கேஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரேமா என்கிற மனைவியும், இலக்கியா என்ற மகளும், ராகுல், பிரவீன்(16) என்ற மகன்களும் உள்ளனர். பிரவீன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான. இவர்கள் கடந்த 1980-ம் ஆண்டு கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு அரசு பொது தேர்வு எழுதும் பிரவீன் மற்றும் ராகுல் வீட்டில் படித்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர் பாராத விதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் பிரவீன் தலையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பிரவீன் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாஸ்கரன் கூறியதாவது, கடந்த 43 ஆண்டுகளாக இந்த தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறோம். அரசு சார்பில் புதிய வீடு கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது. இதேபோல் அருகே உள்ள வீடுகளும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தார்.