

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய், தந்தை கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் சிறுமி தனது தாயுடன், அவரது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். சிறுமியின் சித்தியும் கணவரை பிரிந்து சிறுமியின் பாட்டி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
சித்தியின் கணவர் தனது குழந்தைகளை பார்க்க அவ்வப்போது அங்கு வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சித்தியின் கணவர் அங்கு வந்துள்ளார். அப்போது அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பலமுறை சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையறிந்த ராமநாதபுரம் சைல்டு ஹெல்ப்லைன் அலுவலர்கள் விசாரணை நடத்தி சிறுமியுடன் திருவாடானை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார், சிறுமியின் சித்தியின் கணவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.