12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் நகல் பெறுவதில் பிரச்சினை - சி.பி.எஸ்.இ. நிர்வாகம் விளக்கம்

விடைத்தாள் நகல் மங்கலாக படிக்க முடியாத நிலையில் வந்தது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் நகல் பெறுவதில் பிரச்சினை - சி.பி.எஸ்.இ. நிர்வாகம் விளக்கம்
Published on

சென்னை,

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இந்த ஆண்டு டிஜிட்டல் முறையில் நடைபெற்றது. அதில் சிலருக்கு மதிப்பெண் குறைவாக வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மறுமதிப்பீடு செய்வதற்கு விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அவகாசம் வழங்கி இருந்தது.

அதன்படி விண்ணப்பித்ததில் சில பிரச்சினைகளை மாணவ-மாணவிகளும், பெற்றோரும் சந்தித்துள்ளனர். அதாவது, இணையதளம் முடங்குவது, விடைத்தாள் நகல் மங்கலாக படிக்க முடியாத நிலையில் வந்தது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நேற்று தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு விளக்கம் அளித்திருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“மாணவர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்களுக்கு விண்ணப்பிக்கும்போது, சில தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக சில நேரங்களில் தவறான கட்டணப்பிடித்தங்கள் செய்யப்பட்டன. சில நேரங்களில், கூடுதல் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்ட நிலையில், மற்ற நேரங்களில், குறைவான தொகை வசூலிக்கப்பட்டது.

கூடுதல் கட்டணம் செலுத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும், சரியான கூடுதல் தொகையானது, பணம் செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட அதே கட்டண முறைக்கே திருப்பிச்செலுத்தப்படும்.

இதேபோல், குறைவான கட்டணம் பிடித்தம் செய்யப்பட்ட நிகழ்வுகளில், தேவைப்பட்டால், மீதமுள்ள தொகையைச் செலுத்துவது குறித்து விண்ணப்பதாரர்களுக்குத் தனியாகத் தெரிவிக்கப்படும். இத்தகைய அனைத்து நிகழ்வுகளிலும், விண்ணப்பதாரர்கள் புதிய கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தேவையின்றி, மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கண்டவற்றை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com