சாலை விரிவாக்க பணிக்காக அகற்றம்: வீடுகளை இழந்தவர்களுக்கு சீமான் ஆறுதல்

குன்றத்தூரில் சாலை விரிவாக்க பணிக்காக வீடுகள் இடித்து அகற்றப்படுகிறது. வீடுகளை இழந்தவர்களுக்கு சீமான் ஆறுதல் கூறினார்.
சாலை விரிவாக்க பணிக்காக அகற்றம்: வீடுகளை இழந்தவர்களுக்கு சீமான் ஆறுதல்
Published on

குன்றத்தூர் - பல்லாவரம் சாலை விரிவாக்க பணிக்காக கடந்த மாதம் குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கரைமாநகர் பகுதியில் சாலையோரம் உள்ள வீடுகள், கடைகள், செட்டுகள் ஆகியவற்றை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். எனினும் தொடர்ந்து வீடுகளை இடிக்கும் பணி நடந்து வந்தது.

அந்த பகுதியில் தனியார் வீட்டுமனை விற்பனை நிறுவனம் சார்பில் வீட்டு மனைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு இடையூறாக இருக்கும் குடியிருப்புகள் மட்டும் அகற்றப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் வீடுகளை இழந்த பொதுமக்களை நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தனியார் நிறுவனம் சார்பில் வீட்டுமனைகள் அமைய உள்ள இடத்தையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-

கரைமா நகர் பகுதியில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்ற மக்கள் குடியிருக்கும் வீடுகளை பாரபட்சமின்றி இடித்து அகற்றுகின்றனர். சாலை விரிவாக்க பணி என்றால் சாலையின் இருபுறங்களிலும் அகற்றப்பட வேண்டும், ஆனால் ஒரு பகுதி மட்டுமே அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணியை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லை என்றால் நானே இங்கு வந்து குடியிருந்து கொண்டு வீடுகளை இடிக்க விடாமல் தடுத்து நிறுத்துவேன்.

தமிழக முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் தேவையற்றது. சிங்கப்பூர் நாட்டை மொத்தமாக சுற்றி பார்க்க 48 மணி நேரம் தான் ஆகும். தமிழகத்தின் 2 மாவட்டங்கள் சேர்ந்ததுதான் சிங்கப்பூர். அது போன்ற சின்ன நாட்டிடம் முதலீட்டாளர்களை கேட்பது ஒரு இனத்தை, நாட்டை அவமதிக்கும் செயல். 6 விதமான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கூறியுள்ளனர். அது எதுபோன்ற ஒப்பந்தம் என தெளிவுபடுத்த வேண்டும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லவில்லை. ஆனால் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். அந்த முதலீடு வந்ததா? இதுவரை எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளது? எவ்வளவு பேர் வேலை பெற்றுள்ளனர்? என்பதை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com