20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.

சென்னை,

உதவி ஆப்செட் மிஷின் டெக்னீஷியன் மற்றும் காலங்குறிப்பவர் (நிலை-II)பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 19 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் மஸ்தூர் பணியிடத்திற்கு ஒரு நபருக்கும் என மொத்தம் 20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

"தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.2.2025) தலைமைச் செயலகத்தில், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் உதவி ஆப்செட் மிஷின் டெக்னீஷியன் மற்றும் காலங்குறிப்பவர் (நிலை-II) பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 19 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் மஸ்தூர் பணியிடத்திற்கு ஒரு நபருக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் இயங்கும் அரசு மைய அச்சகம் மற்றும் கிளை அச்சகங்களை புத்தாக்கம் செய்வதற்காக இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை அரசு மைய அச்சகத்திற்கு 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வண்ண எண்ணிம உற்பத்தி அச்சுப்பொறி ஒன்று மற்றும் அரசு மைய அச்சகம் மற்றும் 5 கிளை அச்சகங்களுக்கு சுமார் 6 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 11 வகையான இயந்திரங்கள் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மேலும், திருச்சிராப்பள்ளி அரசு கிளை அச்சகத்திற்கு அச்சிடப்பட்ட படிவங்கள், பதிவேடுகளை இருப்பு வைத்து பராமரிக்க ஏதுவாக 1 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பில் போதிய கட்டமைப்பு வசதியுடன் கூடுதல் கட்டடம் 9,456.97 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அத்துடன் கடந்த 4 ஆண்டுகளில் 14 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

உதவி ஆப்செட் மிஷின் டெக்னீஷியன் மற்றும் காலங்குறிப்பவர் (நிலை-II) பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 19 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் மஸ்தூர் பணியிடத்திற்கு ஒரு நபருக்கும் பணிநியமன ஆணைகள் வழங்குதல்;

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் நேரடி நியமனம் வாயிலாக நியமனம் செய்ய உதவி ஆப்செட் மிஷின் டெக்னீஷியன் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 17 நபர்களுக்கும், காலங்குறிப்பவர் (நிலை-II) (Time Keeper Grade-II) பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 2 நபர்களுக்கும் மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளரின் வாரிசுதாரர் ஒருவருக்கு கருணை அடிப்படையில் மஸ்தூர் பணியிடத்திற்கும், என மொத்தம் 20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றைய தினம் 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் வெ.ஷோபனா, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story