

சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழைப்பதிவாகி உள்ளது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.
கடலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. அவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கனமழை காரணமாக விருத்தாசலம் - கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.
கடலூரில் கனமழை காரணமாக பெரிய பட்டு மற்றும் பூச்சி மேடு இடையேயான தரைப்பாலம் உடைந்துள்ளது. 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், பருவமழை பாதிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.