

பவானி,
ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வெள்ள நீர் பவானி பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.
இதனால் வீடுகள் பல வெள்ளநீரால் சூழ்ந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாலை முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இந்த நிலையில், வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி இன்று அமைச்சர்களுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். அதன் பின்னர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேட்டி, சேலை, உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை அவர் வழங்கினார்.
அதன்பின் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அவர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். வெள்ள நீரில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து கொண்டார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ளார்.