ஹஜ் யாத்திரை தொடர்பாக பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஹஜ் யாத்திரைக்கு சென்னையை புறப்படும் இடமாக அறிவிக்குமாறு பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஹஜ் யாத்திரை தொடர்பாக பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
Published on

சென்னை,

ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்ளும் நடைமுறை தொடர வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததில், வரும் 2022 ஆம் ஆண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசின் ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ள ஹஜ் 1443 ஏ.ஹெச். 2022 என்ற அறிக்கையில, ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள குறிப்பிட்டுள்ள விமான நிலையங்களின் பட்டியலில், தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் செல்லும் யாத்திரீகர்கள், கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் இருந்து செல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது யாத்ரீகர்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும் என முதல்-அமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து இஸ்லாமிய சமூகத்தினர், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் ஆகியோரிடம் இருந்து சமூக ஊடகங்கள் மூலமாக தனக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்திருப்பதாக முதல்-அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே ஹஜ் யாத்திரைக்காக சென்னையில் இருந்து சுமார் 700 கி.மீ. தொலைவில் உள்ள கொச்சி விமான நிலையத்தை புறப்படும் இடமாக அறிவிக்கப்பட்டதை மாற்றி, யாத்ரீகர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்தியாவின் 4-வது பெரிய நகரமாக விளங்கும் சென்னையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு அனுமதி வழங்கிட சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com