

சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் தடுப்பூசி பற்றாக்குறையை தவிர்க்க மத்திய அரசிடம் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில் செங்கல்பட்டு மாவட்டம் மேலேரிப்பாக்கம் பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான எச்.எல்.எல். நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தடுப்பூசி தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள இந்த நிறுவனத்தில், இதுவரை இங்கு தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். நிறுவனத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு எச்.எல்.எல். நிறுவனத்தின் தடுப்பூசி தயாரிக்கும் ஆய்வகத்தில் உடனடியாகத் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க, முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்றும் அதற்கு மத்திய அரசும் நிதி ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.