

சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் ஆகிய 3 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர் அதற்கான கடிதத்தையும் தங்கள் கைப்பட எழுதி சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அந்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
ராஜினாமா செய்த கையோடு அந்த 3 பேரும் த.வெ.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் காலையில் எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த மேலும் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, சென்னை தலைமைச் செயலகத்தில் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்தார். இதன் காரணமாக தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4 தொகுதிகளுக்கும் தற்போது ராஜினாமா செய்தவர்களே த.வெ.க.சார்பில் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் எம்.ஜி.ஆர். மரபை முடிவுக்கு கொண்டு வர முதல்-அமைச்சர் விஜய் முயல்வதாக அதிமுக எம்.பி. இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தற்போது நடைபெறும் அரசியல் எம்.ஜி.ஆர். மரபுக்கும் - விஜய் மரபுக்கும் இடையே நடைபெறும் யுத்தம் ஆகும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை இழுத்து எடப்பாடியாரை பலவீனமாக்கி MGR Legacy -ஐ முடிவுக்கு கொண்டு வர முதல்-அமைச்சர் விஜய் முயல்கிறார். ஆனாலும் இறுதியில் எம்.ஜி.ஆரே வெல்வார்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.