முதல்-அமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டை பயணம்: ரூ. 100 கோடி மதிப்பிலான நலத்திட்டம் உதவிகளை வழங்குகிறார்...!

முதல்-அமைச்சர் விஜய்-யின் வருகையையொட்டி புதுக்கோட்டையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதல்-அமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டை பயணம்: ரூ. 100 கோடி மதிப்பிலான நலத்திட்டம் உதவிகளை வழங்குகிறார்...!
Published on: 

புதுக்கோட்டை,

முதல்-அமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டைக்கு பயணம் மேற்கொண்டு பயனாளிகளுக்கு ரூ. 100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இடைத்தேர்தல்

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய தவெக தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, அதிமுகவில் இருந்து விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, இந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தவெக வெற்றிபெற்றது.

அதேவேளை, எஞ்சிய விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 4 தொகுதிகளுக்கும் முதல்-அமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றிபெற்று பின்னர் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு இந்த தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் விஜய் புதுக்கோட்டை பயணம்

அந்த வகையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார். சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்-அமைச்சர் விஜய் கார் மூலம் புதுக்கோடை செல்கிறார்.

புதுக்கோட்டையில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் மேற்கொள்ளும் முதல்-அமைச்சர் விஜய் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

அதன்படி, புதுக்கோட்டை நகரில் ரூ. 23 கோடியே 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நவீன பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கிறார்.

ரூ. 100 கோடியில் நலத்திட்ட உதவிகள்

பின்னர், ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் விழாவில் 14 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் வழங்குகிறார்.

மேலும், ரூ.8 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பல் நோக்கு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்தும், புதிய திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார். பின்னர், புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் முதல்-அமைச்சர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். முதல்-அமைச்சர் விஜய்-யின் வருகையையொட்டி புதுக்கோட்டையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

X