

சென்னை,
சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு: கவர்னர் மாளிகைக்கு செல்வதுபோல் புறப்பட்டு வந்தார்
தமிழக முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு, ஒரு சில இடங்களில் திடீர் ஆய்வை மேற்கொண்டார். கடந்த வாரம் சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அவர் சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று பணிகளை முடித்து கொண்டு காரில் புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை செல்லுமாறு கூறினார். ஆனால், கார் சைதாப்பேட்டையை நெருங்கும்போது அங்குள்ள சமூக நீதி விடுதிக்கு செல்லுமாறு கூறினார். இதனால், கார் மாற்றுப்பாதையில் சென்றதால், பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாரே திணறிப்போனார்கள்.
சமூக நீதி விடுதிக்கு வந்த முதல்-அமைச்சர் விஜயை பார்த்து அங்குள்ள ஊழியர்கள் அதிர்ந்து போனார். ஒவ்வொரு இடமாக சென்று அவர் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கும் உணவுகள் குறித்தும் கேட்டறிந்தார். முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த திடீர் ஆய்வுப் பணி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.