

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி அறிவிக்கப்பட்டு, மே 10ம் தேதி தமிழக முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்து 6 நாள்களாகியும் அவர்களுக்கான துறைகள் இன்னும் ஒதுக்கப்படாமல் இருந்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டால்தான், தற்போது நிலுவையில் உள்ள பல்வேறு துறை பணிகள் தொடங்கும். அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்தால் பல துறைப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோப்புகள் கையெழுத்திடாமல் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில்தான், முதல்-அமைச்சரின் தனிச் செயலாளர் செந்தில்குமார் கவர்னரை சந்தித்துள்ளார். அவரிடம், அமைச்சர்களுக்கான துறைகள் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான தகவல்களும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் விஜய்யுடன் பதவியேற்றுக் கொண்ட ஒன்பது அமைச்சர்களுக்கும் இதுவரை துறைகள் ஒதுக்கப்படாத நிலையில், முதல்-அமைச்சரின் தனி செயலாளர் செந்தில் குமார் இன்று கவர்னரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.