தமிழ்நாட்டில் உறுதியானது கூட்டணி ஆட்சி; கவர்னர் மாளிகையில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு

59 ஆண்டுகளுக்கு பின்பு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுகிறது.
தமிழ்நாட்டில் உறுதியானது கூட்டணி ஆட்சி; கவர்னர் மாளிகையில் அமைச்சர்கள் நாளை பதவியேற்பு
Published on

சென்னை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து, த.வெ.க. சார்பில் காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், முதலில் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. தொடர் முயற்சியின் பலனாக, சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவும் கிடைத்தது. இதில், ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என்று சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் அறிவித்தன. வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்று வி.சி.க. தெரிவித்து இருந்தது.

இதனால், த.வெ.க.வின் மொத்த பலம் 120 ஆக உயர்ந்தது. அதனடிப்படையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 10-ந்தேதி காலை 10 மணிக்கு கவர்னர் அர்லேகர் முன்னிலையில், முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்று கொண்டார். முதல்-அமைச்சர் விஜய்யுடன், புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதன்பின்னர் அவர்களுக்கு இலாகாக்களும் ஒதுக்கப்பட்டன. எனினும், மீதமுள்ள பல துறைகளுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர்.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியானது. இதில், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என ஏற்கனவே கூறியபடி தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதன்படி அக்கட்சி சார்பில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

அவர்கள் இருவரும் அமைச்சர்களாவதற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் அளித்து உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் தேசிய பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டு உள்ளார். இதன்படி நாளை காலை அவர்கள் இருவரும் பதவியேற்பார்கள் என தகவல் தெரிவிக்கின்றது.

இதனால், 1967-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுகிறது. அக்கட்சிக்கு உயர்கல்வி மற்றும் சுற்றுலா துறை ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. இதில், ராஜேஷ்குமார், வழக்கறிஞராக உள்ளார். தமிழக மக்களின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வாழ்த்துகள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஒருவர் அமைச்சராக உள்ளார். இதற்கு அக்கட்சியின் தேசிய தலைமை ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், அதுபற்றி நாளை அறிவிக்கப்படும் என தெரிகிறது. வி.சி.க. அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு முதல்-அமைச்சர் விஜய் உறுதி செய்துள்ளார். இதனால், அக்கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான வன்னியரசு அமைச்சராக பதவியேற்பார் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்று தகவல் தெரிவிக்கின்றது.

தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் அர்லேகர் கேரளத்தில் இருந்து இன்றிரவு தமிழகத்திற்கு வருகை தருகிறார்.

இதன்படி காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், த.வெ.க. என 18 பேர் நாளை அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். இதில், 59 ஆண்டுகளுக்கு பின்பு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுகிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உறுதியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com