

சென்னை,
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
இந்த நிலையில் நிவர் புயல் எதிரொலியாக சென்னையில் 1.33 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், நிவர் புயல் காற்றின் வேகத்தில் 286 செல்போன் டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
அனைத்து பகுதிகளிலும் தகவல் தொடர்பு துண்டிக்கப்படாமல்இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிவர் புயலால் பாதிக்கப்படும் இடங்களில் இருந்து 1.33 லட்சம் மக்கள் 1,516 நிவாரண முகாம்களில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் புயல் சூழ்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
இந்திய கப்பல் படையை சேர்ந்த இரண்டு கப்பல்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட தயார் நிலையில் உள்ளது. புயல் கரையை கடந்து விட்டது என அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. சிவராத்திரி அன்று மக்கள் கவனத்துடன் இருப்பதை போல் இன்று மக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.