

சென்னை,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போலி சான்றிதழ்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நாட்டில் வாழும் வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான்பூச்சிகள் என விமர்சனம் செய்ததாக தகவல் வெளியானது. இளைஞர்கள் குறித்து தான் அவ்வாறு பேசவில்லை என்று அவர் உடனடியாக விளக்கம் கொடுத்து இருந்தார். ஆனாலும் அந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு புதிய கட்சிக்கான பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதுதான் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'. ஆம் ஆத்மியின் சமூக ஊடகப்பிரிவில் இடம்பெற்றிருந்த அபிஜித் தீப்கே, இந்த கட்சியை நிறுவியிருக்கிறார். வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சி என்று விமர்சித்த நிலையில் இதனை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
தொடங்கிய 4 நாட்களுக்குள் இந்த கட்சியின் எக்ஸ் பக்கத்தை 1.4 கோடிக்கு மேற்பட்டோரும், இன்ஸ்டாகிராம் பக்கத்தை 33 லட்சத்துக்கு மேற்பட்டோரும் பின்தொடர்கிறார்கள். இந்த நிலையில் நாடு ஏதோ சொல்ல முயற்சிக்கிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
நான்கு நாட்களில் 15 மில்லியன் இளைஞர்கள் பதிவு செய்கிறார்கள். இது ஒரு பூச்சிப் பிரச்சினை அல்ல. இதன் மூலம் நாடு ஏதோ ஒன்றை சொல்ல முயற்சிக்கிறது. நாம் அதை கவனிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.