தென்னையில் கூடுதல் மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரம் இடவேண்டும்

தென்னையில் கூடுதல் மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரம் பயன்படுத்த வேண்டும் என வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி தெரிவித்து உள்ளார்.
தென்னையில் கூடுதல் மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரம் இடவேண்டும்
Published on

தென்னை சாகுபடி

நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 46 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மோகனூர், கபிலர்மலை, பரமத்தி, சேந்தமங்கலம், எருமப்பட்டி, திருச்செங்கோடு, நாமகிரிப்பேட்டை ஆகிய வட்டாரங்களில் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென்னையில் கூடுதல் மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரம் இடுதல் அவசியம் ஆகும்.

தென்னை நுண்ணூட்ட கலவை உரத்தில் துத்தநாகசத்து 5 சதவீதம், இரும்புச்சத்து 3.80 சதவீதம், மேங்கனீசு சத்து 4.8 சதவீதம், போரான் 1.6 சதவீதம் மற்றும் தாமிரசத்து .05 சதவீதம் என்கிற விகிதத்தில் உள்ளது. இரும்புச்சத்தானது தென்னை இலையில் பச்சையம் உருவாவதற்கு நடைபெறும் வினையிலும், பயிர் வளர்சிதை மாற்றங்களில் ஈடுபடும் பல்வேறு என்சைம்கள் எனப்படும் நொதிப்பான்கள் உருவாவதிலும் அதனை இயக்குவதிலும் உறுதுணை புரிகின்றது.

நுண்ணூட்ட கலவை உரம்

மேங்கனீசு சத்தானது மண்ணில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்களை தென்னை எடுத்துக் கொள்ள உறுதுணை புரிகின்றது. போரான் சத்து தென்னை இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் குரும்பை உதிர்வதை தடுக்கிறது. தாமிர சத்தானது தென்னையில் ஒளிச்சேர்க்கை நடைபெறும் வினையிலும், நொதிப்பான்களை உருவாக்குவதிலும் பச்சையம் தயாரிப்பிலும் மற்றும் அதிக எண்ணிக்கையில் காய்கள் உருவாவதற்கும் உதவி புரிகின்றது.

விவசாயிகள் தென்னை நுண்ணூட்ட கலவை உரத்தை மரம் ஒன்றிற்கு 1 கிலோ வீதம் 50 கிலோ தொழுஉரத்துடன் கலந்து வருடம் ஒரு முறை இட வேண்டும். தென்னையில் நுண்ணூட்ட கலவை உரத்தினை இடுவதனால் குரும்பை உதிர்வது தடுக்கப்பட்டு அதிகமான காய்கள் பிடிக்க உறுதுணை புரிகின்றது. எனவே, நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி தென்னை விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com