வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்: ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்குக- அன்புமணி ராமதாஸ்

வறட்சியால் கருகும் தென்னை மரங்களுக்கு ரூ.10,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்: ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்குக- அன்புமணி ராமதாஸ்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு வாட்டும் வெப்பநிலை மற்றும் வறட்சியால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2.5 கோடி தென்னை மரங்கள் கருகி வருகின்றன. பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி வந்து தென்னை மரங்களுக்கு பாய்ச்சும் நிலைக்கு கொங்கு மண்டல விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு மரத்திற்கு ஒரு நாளைக்கு குறைந்து 40 லிட்டர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு மரத்திற்கு ஒரு நாளைக்கு தண்ணீர் பாய்ச்ச ரூ.10 முதல் 13 வரை செலவாகும். 1,000 தென்னை மரங்களை வைத்துள்ள விவசாயி , அவற்றுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஒரு மாதத்திற்கு ரூ.4.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இது சாத்தியம் இல்லை. ஆயிரக்கணக்கில் செலவழித்தும் தென்னை மரங்களைக் காப்பாற்ற முடியாத நிலையில், விவசாயிகளின் துயரைத் துடைக்க தமிழக அரசு எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் நிலவும் வறட்சியால் மா, தென்னை, பப்பாளி உள்ளிட்ட அனைத்து பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் தமிழ்நாட்டில் நீர்ப்பாசனத் திட்டங்கள் போதிய அளவில் செயல்படுத்தப்படாததுதான் காரணம். அதை செய்ய கடந்தகால மற்றும் நிகழ்கால ஆட்சியாளர்கள் தவறி விட்ட நிலையில், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

விவசாயிகளின் துயரத்தை தற்காலிகமாக தீர்க்கும் வகையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு ஒரு மரத்திற்கு ரூ.10,000 வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் இத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க நீர் மேலாண்மைத் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com