

கோயம்புத்தூர்,
கோயம்புத்தூரில் பற்களால் 3.5 டன் எடையுள்ள மினி பஸ்ஸை இழுத்து 15 வயது பள்ளி மாணவன் ஒருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த மாணவன் பிரதியுமன் (வயது 15). அந்த மாணவன், அங்குள்ள தனியார் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். கராத்தே கலையையும் கற்று வரும் அவர், தனது அசாத்திய உடல் வலிமையை நிரூபிக்கும் வகையில் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டார். கடந்த 27-ந்தேதி அன்று அந்த மாணவர் படிக்கும் பள்ளியின் வளாகத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
அந்த நிகழ்வில், சுமார் 3,500 கிலோ (3.5 டன்) எடையுள்ள மினி பஸ்ஸை தனது பற்களால் கயிற்றைக் கவ்விப் பிடித்து, பிரதியுமன் வெற்றிகரமாக இழுத்துக் காட்டினார். அவருடைய இந்த வியக்கத்தக்க முயற்சியைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சக மாணவர்கள் அனைவரும் கைதட்டி பாராட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மாணவன் பிரதியுமனின் இந்த அசாத்திய முயற்சி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, ‘புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ சாதனைப் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதனை நிகழ்த்தப்பட்ட உடனே, அந்த இடத்திலேயே அவருக்கு உலக சாதனைக்கான சான்றிதழும் பதக்கமும் நடுவர்களால் வழங்கி கவுரவிக்கப்பட்டது.