கோவை: ஆடிட்டர் வீட்டில் 75 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

கோவை ஒப்பணக்காரவீதி பகுதியில் வசித்து வரும் ஒரு முதியவர், தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
வெள்ளி பொருட்கள் திருட்டு.
Published on

கோவை,

கோவை ஒப்பணக்காரவீதி பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆடிட்டர் ஒருவரின் வீட்டில் இருந்து 75 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற ஆடிட்டர்

கோவை ஒப்பணக்காரவீதி பகுதியில் வசித்து வரும் சேஷகிரி (வயது70), தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பெங்களூருவில் வசித்து வரும் தனது மகனை பார்ப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றார். அங்கு ஒரு மாதம் தங்கி இருந்துவிட்டு நேற்று காலை கோவையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.

75 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு சுமார் 75 கிலோ வெள்ளி பூஜை பொருட்கள், வெள்ளித்தட்டு, வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு போன வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.1 1/2 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com