

கோவை,
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கணபதி (வயது 67) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.
இவர் துணை வேந்தராக பதவி ஏற்ற பின்னர் பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் பணியிடத்துக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில் தகுதி வாய்ந்தவர்களுக்கு பணி நியமனம் வழங்காமல், லஞ்சம் பெற்றுக்கொண்டு தகுதி இல்லாத நபர்களுக்கு பணி வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதனால் துணை வேந்தரை கண்டித்து மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்பும், வடவள்ளி பஸ் நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்கலைக்கழக விதிமுறைகளை மீறுவதாக துணை வேந்தர் கணபதி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொடர்ந்து போராட்டங்களும் நடந்தன.
ரூ.30 லட்சம் லஞ்சம்
இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணி புரியும் சுரேஷ் (41), பதவி உயர்வு பெற விரும்பினார். தனக்கு இணை பேராசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று துணைவேந்தர் கணபதியிடம் கேட்டு உள்ளார். அதற்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று அவரிடம் துணை வேந்தர் கணபதி கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து உதவி பேராசிரியர் சுரேஷ் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.1 லட்சம் பணம் மற்றும் ரூ.29 லட்சத்துக்கான 4 காசோலைகளை கொடுத்தனர்.
இதனை பெற்றுக்கொண்ட சுரேஷ் நேற்று காலை 10 மணி அளவில் கோவை வடவள்ளி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தரின் இல்லத்துக்கு சென்றார். அங்கு துணை வேந்தர் கணபதியிடம், ரசாயனம் தடவப்பட்ட ரூ.1 லட்சம் பணம் மற்றும் ரூ.29 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
துணைவேந்தர் கைது
அப்போது அங்கு மறைந்து இருந்த கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தட்சிணா மூர்த்தி மற்றும் ராஜேஷ் ஆகியோர் துணைவேந்தர் கணபதியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரையும் அவர்கள் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து துணைவேந்தர் கணபதியின் வீடு, பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அறைகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். துணைவேந்தர் கணபதியிடம் காலை 10 மணிக்கு தொடங்கிய போலீஸ் விசாரணை தொடர்ந்து 8 மணி நேரத்துக் கும் மேலாக நடைபெற்றது.
லஞ்ச ஒழிப்பு போலீசாரால் துணைவேந்தர் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும் பரபரப்பு ஏற்பட்டதால், பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. துணை வேந்தர் வீட்டின் நுழைவு வாயில் பகுதி மூடப்பட்டது.
சர்ச்சைகளில் சிக்கியவர்
லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டுள்ள கணபதி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியவர். இவர் கடந்த 17.3.2016 அன்று கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி ஏற்றார். அதன்பின்னர் பல்கலைக்கழகத்தில் 73 உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.
இதில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமலும், பணத்தை பெற்றுக்கொண்டும் பணி ஆணைகளை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒவ்வொரு பணி இடத்துக்கும் ரூ.30 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை பல்கலைக்கழக அதிகாரிகள் சிலரின் உடந்தையுடன் லஞ்சம் பெற்றதாக துணைவேந்தர் மீது புகார் கூறப்பட்டது.
இதுகுறித்து தமிழக உயர் கல்வித்துறை விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்தி வந்தது.
இதற்கிடையே, நவாவூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி பிரபா என்பவர் தனக்கு பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், அவர் உயர் கல்வி படிக்க விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டதால் அவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு
இதுகுறித்து ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் நடத்திய விசாரணையில், பல்கலைக்கழக நிர்வாகம், வேறொருவரை பணி நியமனம் செய்ய லட்சுமி பிரபாவின் விண்ணப்பத்தை நிராகரித்ததாக தெரியவந்தது.
அதன்பிறகு ஆணையத்தின் துணைத்தலைவர், லட்சுமி பிரபாவின் விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தை அறிவுறுத்திய போதிலும், உயர்படிப்பு படிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் லட்சுமிபிரபா தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் மீண்டும் புகார் அளித்தார். தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் இந்த புகாரை வடவள்ளி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பினர். அதன்பேரில் வடவள்ளி போலீசார் துணை வேந்தர் கணபதி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
குற்றச்சாட்டு
கைது செய்யப்பட்ட துணை வேந்தர் கணபதியின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் துறையூர் ஆகும். இவருக்கு சொர்ணலதா என்ற மனைவியும், எழில் விக்ரம் என்ற மகனும், அனுஷா என்ற மகளும் உள்ளனர். பி.எச்.டி. பட்டம் பெற்று உள்ள கணபதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்து படிப்படியாக துறை தலைவராக உயர்ந்தார்.
இந்த நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக அவர் நியமிக்கப்பட்டார். அவர் பணியில் சேர்ந்தது முதல் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து உயர்கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர் மீது பல லஞ்ச புகார்கள் கூறப்பட்ட போதிலும், அதற்கான ஆதாரங்கள் கிடைக்காததால் தொடர்ந்து தப்பி வந்தார். ஆனால் இப்போது கையும், களவுமாக சிக்கி உள்ளார்.