கோவை செம்மொழிப் பூங்கா: இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி

கோவை செம்மொழிப் பூங்காவினை கடந்த மாதம் 25-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவை செம்மொழிப் பூங்கா: இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி
Published on

கோவை காந்திபுரத்தில் உள்ள சிறைத்துறை மைதானத்தில் ரூ.208.50 கோடி செலவில் செம்மொழிப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவினை கடந்த மாதம் 25-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

செம்மொழி பூங்காவில் நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில், சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள செண்பக மரம், செம்மொழி வனம், நறுமண வனம், ஐந்திணை வனம், நலம் தரும் வனம், மலர்வனம், புதிர் வனம், நிழல் வனம், 1000-த்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் கொண்ட ரோஜா தோட்டம், மூலிகை தோட்டம், பசுமை வனம் உள்ளிட்ட பல வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கியூஆர்கோடு பயன்படுத்தியும், இந்த தோட்டங்களில் உள்ள மரம் மற்றும் செடி வகைகளை பற்றி தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர பாரம்பரியம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக 500 பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம், உயர்தர உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய திறந்தவெளி அரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக விளையாட்டுப் பூங்கா, மேம்படுத்தப்பட்ட நடைபாதை, 100-க்கும் மேற்பட்ட கல் இருக்கைகள், மேலும் செம்மொழிப் பூங்கா முழுவதும் இரவில் ஜொலிக்கும் வண்ணம் அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த பூங்காவினை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.15, குழந்தைகளுக்கு (10-வயதிற்குட்பட்டோர்) ரூ.5, நடைபாதை உபயோகிப்போருக்கு ஒரு நபருக்கு (மாதாந்திர கட்டணம்) ரூ.100, கேமராவிற்கு ரூ.25, வீடியோ கேமராவிற்கு ரூ.50, திரைப்பட ஒளிப்பதிவிற்கு (நாளொன்றிற்கு) ரூ.25 ஆயிரம், குறும்பட ஒளிப்பதிவிற்கு மற்றும் இதர ஒளிப்பதிவிற்கு (நாளொன்றிற்கு) ரூ.2 ஆயிரம் என கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த செம்மொழிப்பூங்காவை பார்வையிட இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பூங்கா காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com