கோவை கல்லூரி மாணவி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை

குற்றவாளிகள் மூன்று பேரும் சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை கல்லூரி மாணவி  பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை
Published on

கோவை,

கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந் தேதி இரவு மதுரையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். முன்னதாக கல்லூரி மாணவி அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர், ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்ற கருப்பசாமி (வயது30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (21), மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்ற தவசி (20) ஆகிய 3 பேரை துடியலூர் அருகே துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் 8 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணை, அனைத்து மகளிர் கோர்ட்டில் துரிதமாக நடைபெற்றது.

இந்தநிலையில், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சாட்சி விசாரணை மற்றும் அனைத்து தரப்பு விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருமே குற்றவாளிகள் என நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து குற்றவாளிகள் மூன்று பேருக்குமான சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இதன்படி, குற்றவாளிகள் மூன்று பேருக்கும் வாழ்நாள் சிறை அதாவது சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com