

கோவை,
கோவையை அடுத்த மதுக்கரை அருகே திருமலையாம்பாளையத்தை சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கநாதன். இவருடைய மனைவி மோனிகா (வயது 32). தனியார் கல்லூரி ஊழியர். இவர்களின் வீட்டில் சென்னை திருவள்ளூரை சேர்ந்த விஸ்வநாதன் (42), அவருடைய மனைவி ஷோபா (38) ஆகியோர் வாடகைக்கு குடியிருந்தனர். இதையடுத்து அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றனர். பின்னர் கோவை வந்த அந்த தம்பதி, மோனிகாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு. கோவில் பிரசாதம் கொண்டு வந்து உள்ளோம். நீங்கள் கல்லூரிக்கு வெளியே வந்து நில்லுங்கள். நாங்கள் அங்கு வந்து தருகிறோம் என்று கூறி உள்ளனர்.
அதை நம்பிய மோனிகா கல்லூரியின் முன்பு காத்து நின்றார். அப்போது ஒரு காரில் வந்த விஸ்வநாதன், ஷோபா ஆகியோர் கோவில் பிரசாதத்தை கொடுப்பது போல் மோனிகாவின் அருகே சென்றனர். பின்னர் அவர்கள் திடீரென்று மோனிகாவை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். உடனே அவர் அலற முயன்றார். ஆனால் சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் அவர் சத்தம் போடவில்லை. இதையடுத்து அந்த தம்பதி. மோனிகாவின் கழுத்தில் கிடந்த தாலிக்கொடி, செயின், மோதிரம் ஆகியவற்றை பறித்தனர். பின்னர் அவரை, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கிவிட்டு தப்பிச்சென்றனர். பறிக்கப்பட்ட நகையின் மதிப்பு ரூ. 5 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து மோனிகா அளித்த புகாரின் பேரில் க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து எட்டிமடை மேம்பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதற்குள் ஒரு தம்பதி இருந்தனர். விசாரணையில் அவர்கள், விஸ்வநாதன்-ஷோபா தம்பதி என்பதும், மோனிகாவிடம் நகையை பறித்துவிட்டு, கேரளாவுக்கு தப்பிச்செல்ல முயன்றதும் தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த தம்பதியை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர்.