

கோயம்புத்தூர்,
கோயம்புத்தூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட தனித்தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 2023, ஜூன்/ஜூலை 2023, மார்ச் 2024 மற்றும் ஜூன்/ஜூலை 2024 ஆகிய பருவங்களில் 10-ஆம் வகுப்பு (SSLC), பிளஸ்-1 (HSC முதலாமாண்டு) மற்றும் பிளஸ்-2 (HSC இரண்டாமாண்டு) பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்த தேர்வு மையங்கள் மூலமாக நேரடியாக விநியோகம் செய்யப்பட்டன.
அவ்வாறு தேர்வு மையங்களில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளாத தனித்தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் அவர்கள் விண்ணப்பத்துடன் இணைத்தனுப்பிய அசல் சான்றிதழ்கள் அனைத்தும் தற்போது முதன்மை கல்வி அலுவலகத்தில் மீள பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தேர்வுத்துறை விதிமுறைகளின்படி, பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் கடந்தும் தனித்தேர்வர்களால் பெற்றுக்கொள்ளப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தையும் அழித்துவிட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
எனவே, இதுவரை சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள் இந்த செய்தி அறிவிப்பு வெளியாகும் நாளில் இருந்து 90 நாட்களுக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளலாம். அலுவலக பணி நாட்களில், வேலை நேரத்தின் போது நேரில் வந்து இவற்றை வாங்கி கொள்ளலாம்.
நேரில் வர இயலாதவர்கள், ரூ.70/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை (Postage Stamp) ஒட்டப்பட்ட, சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன், தேர்வரின் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் மற்றும் தேர்வு கூட அனுமதி சீட்டின் (Hall Ticket) ஜெராக்ஸ் நகல் ஆகியவற்றை இணைத்து இவ்வலுவலக முகவரிக்கு தபாலில் அனுப்பி தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட இந்த 90 நாட்கள் அவகாசத்திற்குள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள தவறினால், விதிமுறைகளின்படி அந்த மதிப்பெண் சான்றிதழ்களை முழுமையாக அழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.