கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் - கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம்

கோவையில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கோவை,
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். தனியார் விடுதியில் தங்கி இருந்து அவர் கல்லூரிக்கு சென்று வந்தார். இவரும், கோவையில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்தி வரும் 25 வயது வாலிபரும் காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் கோவை விமான நிலையத்தின் பின்புறம் பிருந்தாவன்நகர் காட்டு பகுதியில், கடந்த 2-ந்தேதி இரவு காரில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.நள்ளிரவு 11 மணி அளவில் அந்த வழியாக மொபட்டில் 3 பேர் வந்தனர். இருள் சூழ்ந்த பகுதியில் கார் நிற்பதை பார்த்து அருகில் சென்று பார்த்தனர். மேலும் கல்லூரி மாணவியை தூக்கி சென்று 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மாணவியின் காதலன் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையில் நடந்த இந்த பாலியல் பலாத்கார சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக 7 தனிப்படை அமைக்கப்பட்டு வாலிபர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு அந்த 3 பேரும் கோவை துடியலூர் வெள்ளக்கிணறு அருகே துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி தரப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய கூடுதல் விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் லதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக எஸ்.ஐ.லதா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.






