

கோவை,
கோவை அருகே சூலூரை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற் றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன்தினம் மாலையில் கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் சிறுமியை பெற்றோர் மற்றும் உறவினர் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்க வில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிறுமியை கடத்திச்சென்றதாக கூறப்பட்டது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சூலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேம ராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.இதற்கிடையே சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் ஒரு சிறுமியின் உடல் கிடப்பதாக சூலூர் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த சிறுமியின் உடலை மீட்டனர்.
தகவல் அறிந்த மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யாபாரதி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத் தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமி தான் காணாமல் போன வர் என்பதும், அவரை 2 பேர் கடத்திச்சென்று கொலை செய்து உடலை முட்புதரில் வீசிச் சென்றதும் தெரியவந்தது. போலீசார் அந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியை கடத்தி சென்றவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு உடலை முட்புதரில் வீசியதாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் மற்றும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறுமியின் சாவுக்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் கார்த்திக், மோகன் ராஜ் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில், சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் தற்போது வரை எந்த கருத்தும் கூறவில்லை என சிறுமியின் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
குற்றவாளிக்கு கொடுக்கப்படும் கடுமையான தண்டனை மூலம் இனிமேல் எந்த ஒரு பெண்ணுக்கும் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது, அந்த அளவிற்கு கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதுவரை, சூலூர் சம்பவத்தில், முதல்-அமைச்சர் விஜய் அலுவலக ரீதியாகக்கூட எந்த ஒரு அறிவிப்பும் தரவில்லை. பாதிக்கப்பட்டது கஷ்டப்படும் குடும்பம் என்பதால் நிவாரண நிதி வழங்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு எங்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும். முதல்-அமைச்சர் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் உறவினர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இதற்கிடையே, சிறுமியின் உடல் கூராய்வு நிறைவடைந்து, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், உயிரிழந்த சிறுமியின் தாய் வழி உறவினர்கள் தமிழக முதல்-அமைச்சர் இந்த சம்பவம் குறித்து தற்போது வரை எந்த அறிவிப்போ, கருத்தோ கூறாமல் இருப்பதாகவும் முதல்-அமைச்சர் இந்த சம்பவம் குறித்த ஒரு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். குற்றவாளிகள் விசாரிக்கப்பட வேண்டும். தண்டனை பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் விசாரணை
இதனிடையே கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் ஆய்வு மேற்கொண்டார். சூலூர் காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரிகளிடம் ஏடிஜிபி விவரங்களைக் கேட்டறிந்தார். ஏடிஜிபியை தொடர்ந்து, டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் கோவை வருகை தந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து சூலூர் காவல்நிலையத்தில் உயர் அதிகாரிகளுடனும், காவல்துறையினரிடம் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
தென்னந்தோப்பில் சிறுமி கொலை
10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. தென்னந்தோப்பில் வைத்து சிறுமியை கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இதற்கிடையே சம்பவ இடத்தில் ஏடிஜிபி மகேஸ்வர் தயாள், ஐஜி ரம்யாபாரதி நேரில் விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தில் தொடர்புடைய கார்த்தி, 33, சிறுமியின் குடும்பத்தினர் வசிக்கும் அதே காம்பவுண்டில் வாடகைக்கு குடியிருந்தவன் என்று தெரியவந்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன் வீட்டை காலி செய்து விட்டு அந்த நபர் வேறு வீட்டுக்கு குடி பெயர்ந்து விட்டான். இதனால் சிறுமியுடன் அந்த கார்த்திக்கு அறிமுகம் இருந்துள்ளது.
அதனால் தான் அழைத்தவுடன் பைக்கில் சென்றுள்ளார். இப்படி அழைத்துச்சென்ற சிறுமியை அவன் கொடூரமாக கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. சிறுமியின் உடலை பார்த்த உறவினர்கள், முகம் சிதைக்கப்பட்டுள்ளதாக கூறி கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது மகளை அழைத்து சென்றது யார் என தெரிய வந்தது. மகளை அழைத்து சென்றவர் பக்கத்துவீட்டில் வசித்து அண்மையில் காலி செய்தவர். மிட்டாய் வாங்கி கொடுத்து மகளை அழைத்து சென்றுள்ளனர். தெரிந்தவர் என்பதால் அவருடன் தனது மகள் சென்றார். மாலை 5 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு மகள் சென்றாள். கைது செய்யப்பட்டவரே எங்களுடன் சேர்ந்து மகளை தேடினார். கடைக்கு சென்ற மகள் திரும்பி வராததால் தேடினோம். என அவரது தாய் கண்ணீர்மல்க கூறியுள்ளார்.