கனிம வள லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவதில் கோவை முதலிடம்!

கோவை மாவட்டத்தில் 7 ஆயிரம் லாரிகளில் தற்போது வரை 4,200 லாரிகளில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
லாரி
Published on: 

கோவை,

கோவையில் கனிம வளங்களை ஏற்றி செல்லும் 4,200 லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இது மாநில அளவில் முதலிடமாகும்.

கனிம வளங்கள்

தமிழக-கேரள எல்லையில் கோவை மாவட்டம் அமைந்து உள்ளது. கோவை-கேரள எல்லையில் 13 சோதனைச்சாவடிகள் உள்ளன. இந்த நிலையில் கோவை வழியாக கேரளத்துக்கு கற்கள், ஜல்லிகள், செம்மண் உள்ளிட்ட கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க கனிம வளத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு மாநிலம் முழுவதும் கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் லாரிகளில் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் வருகிற 31-ந் தேதிக்குள் கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளில் இந்த கருவி பொருத்தவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

மாநில அளவில் முதலிடம்

கோவை மாவட்டத்தில் 7 ஆயிரம் லாரிகள் வரை கனிம வளங்களை ஏற்றிச்செல்கின்றன. இதில் தற்போது வரை 4,200 லாரிகளில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஒரு சில மாவட்டங்களில் 12 ஆயிரம் லாரிகள் வரை கனிம வளங்களை ஏற்றி செல்கின்றன.

ஆனால் அந்த மாவட்டங்களில் கூட 2 ஆயிரம் லாரிகளில் மட்டுமே இந்த கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. 4,200 லாரிகளில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதால் மாநில அளவில் கோவை முதலிடம் பிடித்து உள்ளது.

இதுகுறித்து மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவையில் ஜல்லிக்கற்கள், செம்மண் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் லாரிகளின் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் இந்த லாரிகளில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தும் பணியை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. தற்போது வரை 4,200 லாரிகளில் பொருத்தப்பட்டு உள்ளது. மீதம் உள்ள லாரிகளில் இந்த மாத இறுதிக்குள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com