கோவை: குடியிருப்பு பகுதியில் உள்ள உதிரிபாகங்கள் விற்பனையகத்தில் பயங்கர தீ விபத்து

கட்டிடத்தில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
கோவை,
கோவை மாவட்டம் காட்டூர் பகுதியில் உள்ள ராஜரத்தினம் தெருவில் குடியிருப்பு பகுதிக்கு அருகே வாகன உதிரிபாகங்கள் விற்பனையகம் இயங்கி வருகிறது. 3 அடுக்கு கட்டிடத்தில் இயங்கு வரும் இந்த விற்பனையகத்தில் இன்று எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து கட்டிடத்தில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீயானது மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியதால் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.
இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. தீ விபத்து குறித்து தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களும் தீயை அணைக்க உதவி செய்தனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் வந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






