கோவை: பிராங்க் வீடியோ எடுத்த யூடியூப் சேனல் மீது போலீசார் வழக்குப்பதிவு

பொதுமக்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்து வெளியிட்ட கோவை 360 டிகிரி யூடியூப் சேனல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: பிராங்க் வீடியோ எடுத்த யூடியூப் சேனல் மீது போலீசார் வழக்குப்பதிவு
Published on

கோவை,

பிராங்க் என்ற பெயரில் மக்களை தொல்லை செய்யும் விதமாக வீடியோ எடுத்து வெளியிட்டு வருவது அதிகமாகி உள்ளது. இதனை யூடியூபில் பார்ப்பவர்களுக்கு வேண்டுமென்றால் ஜாலியாகவும், மகிழ்ச்சியாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கலாம். ஆனால், இந்த பிராங்கை பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் நடத்தி அவர்களின் சுதந்திரத்தை கெடுக்கின்றனர்.

சில வீடியோக்களில் பொதுவெளியில் முகம்சுழிக்கும் வண்ணம் பெண்களிடம் எதேச்சையாக நடப்பதுபோன்று தொட்டு அல்லது கையை பிடித்து அநாகரிகமாக நடிக்கிறார்கள். திடீரென நிகழும் வரம்பு மீறிய செயல்களானது சம்பந்தப்பட்டவர்களுக்கு உடல் ரீதியாக அதிர்ச்சியையும், மனரீதியாக திகைப்பையும் ஏற்படுத்துகிறது.

இது போன்று பதிவிடுவது தனிமனித சுதந்திரத்தை கெடுக்கும் விதமாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிராங்க் வீடியோ எடுத்தல் என்ற பெயரில் பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும், அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்துகொண்டால், அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட சிறப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரித்திருந்தார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கையை மீறி, கோவை 360 டிகிரி என்ற யூடியூப் சேனல் பிராங்க் வீடியோவை வெளியிட்டது. இதனால் பொதுமக்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையிலும் வீடியோ எடுத்து வெளியிட்டதாக கோவை 360 டிகிரி யூடியூப் சேனல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிராங்க் வீடியோ தொடர்பாக பொதுமக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com