ஐ.டி.மென்பொருள் ஏற்றுமதியில் கோவை முதலிடம்...!


ஐ.டி.மென்பொருள் ஏற்றுமதியில் கோவை முதலிடம்...!
x

கோவையில் தமிழக அரசின் எல்காட் பங்களிப்புடன் ஐ.டி.பார்க் செயல்பட்டு வருகிறது.

கோவை,

தொன்று தொட்டு தொழில் நகரமாக வெற்றிகரமாக விளங்கி வருகிறது கோவை. இந்த நிலையில் சமீப காலமாக ஐ.டி. துறையிலும் சிறப்பான வளர்ச்சியை எட்டி வருகிறது. பெங்களூரு மற்றும் ஐதராபாத் நகரங்கள் நீண்ட காலமாக ஐ.டி. நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தற்போது கோவையும் அந்த பெயரை இழுத்துக்கொண்டுள்ளது. மிகப்பெரிய ஐ.டி நிபுணத்துவத்துடன் வளர்ந்து இந்தியாவின் 2-வது அடுக்கு நகரமாக கோவை பட்டியலிடப்பட்டுள்ளது.

கோவையில் தமிழக அரசின் எல்காட் பங்களிப்புடன் ஐ.டி.பார்க் செயல்பட்டு வருகிறது. இதில் ரூ.158 கோடி செலவில் புதிய கட்டிடத்தையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு தொடங்கி வைத்ததன் மூலம் அங்கு ஏராளமான புதிய நிறுவனங்கள் கால் பதிக்க தொடங்கி உள்ளன. இது தவிர சரவணம்பட்டி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஐ.டி. நிறுவனங்கள் தங்களது கிளையை தொடங்கி உள்ளன.

வரும் நாட்களில் ஐ.டி. நிறுவனங்களின் சதுர அடி பரப்பளவு 4 மில்லியன் சதுர அடிக்கு நெருங்கும் என்று தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக 2-ம் கட்ட நகரங்களில் ஐ.டி. மென்பொருள் ஏற்றுமதியில் கோவை முதலிடத்தைபெற்றுள்ளது.

கோவையில் இருந்து 2024-25-ம் ஆண்டில் மென்பொருள் ஏற்றுமதி ரூ.15 ஆயிரத்து 105 கோடியாக உயர்ந்துள்ளது. மதுரை மென்பொருள் ஏற்றுமதியில் ரூ.1,905 கோடியாகவும், திருச்சி ரூ.899 கோடியாகவும் உள்ளது. மேலும் திருநெல்வேலி ரூ.251 கோடியாகவும், சேலம் ரூ.130 கோடியாகவும், ஒசூர் ரூ.15 கோடியாகவும் உள்ளது.

கோவை எட்டமுடியாத அளவுக்கு மற்ற 2-ம் நிலை நகரங்களை விட ஏற்றுமதியில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விளாங்குறிச்சியில் உள்ள டைடல் பார்க் மூலம் ரூ.4,671 கோடிக்கு மென் பொருள் உற்பத்தி செய்துள்ளனர். அங்கு 28,621 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். வளாக பகுதியில் இருந்து ரூ.6,873 கோடிக்கு மென் பொருள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியில் 37 ஆயிரத்து 847 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் செயல்பட்டு வரும் ஸ்பான்வென்சர்ஸ் நிறுவனம் ரூ.443 கோடி அளவுக்கு மென் பொருள் உற்பத்தி செய்துள்ளது. அங்கு 3,012 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதுதவிர தனித்தனியான நிறுவனங்கள் உள்பட மொத்த கோவை நிறுவனங்கள் மூலம் ரூ.15 ஆயிரத்து 105 கோடிக்கு மென்பொருள் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. இந்த தகவலை 2-வது பொருளாதார மண்டல நகரங்களுக்கான ஐ.டி. துறை விவர பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஐ.டி. நிறுவனங்களை தொடங்கி நடத்தி வரும், கோவை தொழில் முனைவோர்கள் கூறியதாவது:-

குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் கோவையில் ஐ.டி. வளர்ச்சியை நாம் பார்க்க வேண்டும். குறுகிய காலத்திற்கு, இடத்திற்கான தேவை உள்ளது. நீண்ட கால எதிர்பார்ப்பு என்பது ஐ.டி. துறையில் வேலை வாய்ப்பை அதிகரிப்பது முக்கியமாகும். கோவையில் மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. எனவே நகரில் வளர்ச்சிக்கான பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

சரவணம்பட்டியில் மட்டும் 1.1 மில்லியன் சதுர அடியில் ஐ.டி. நிறுவனங்கள் அமைய தொடங்கி உள்ளன. பல நிறுவனங்கள் வெளி மாநில நகரங்களிலிருந்து கோவைக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. பெரிய நகரங்களை ஒப்பிடும்போது கோவையில் உற்பத்தி செலவு குறைவாக உள்ளது.இதுவும் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஆகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story