

சென்னை,
கோவை மாணவர் அமுதன் கொலை சம்பவத்திற்கு கண்டனம்! இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
உரிய விசாரணை நடத்தவும், போதைப் பொருள் கலாச்சாரத்தை முற்றாக ஒழித்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!! கோவை மாவட்டம் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர் அமுதன் கும்பல் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொடூரக் கொலைக்கு மார்க்சிஸ்ட் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மாணவரை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் கொடிய சம்பவம் தற்செயலாக நடந்ததில்லை. இதற்கு முன்பாக தொடர்ச்சியாக சிறிதும் பெரிதுமாக இரண்டு தாக்குதல்கள் மாணவர்களுக்குள் நடந்திருக்கிறது.
மாணவர்களின் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு மிக அடிப்படையாக கல்லூரியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் புழக்கம் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மாநில அரசும் காவல்துறையும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் என்று இதை சிறுமைப்படுத்துவது சரியானது அல்ல. இவர்கள் கும்பலாக செயல்படுவதற்கும் தயக்கமின்றி தாக்குதல்களில் ஈடுபடுவதற்கும் கஞ்சாவும் போதைப் பொருட்களுமே உந்துதலாக இருந்து வருகிறது.
கல்லூரி நிர்வாகத்தை பொறுத்தவரை, கொலை செய்யப்படட மாணவர் தங்களிடத்தில் கல்வி கற்க வந்தவர் என்கிற மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளவில்லை. மாணவர் மறைவுக்கு பின்புகூட பெற்றோரை ஆறுதல் படுத்தக்கூட கல்லூரி நிர்வாகம் தயாராக இல்லை. மாணவரின் பெற்றோர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் உள்பட அனைத்து அம்சங்களையும் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
கோவை மாவட்டத்தில் போதை கலாச்சாரத்தோடு இணைந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவையில் கடந்த 10 நாட்களில் 3 படுகொலை சம்பவங்கள் நடந்திருக்கிறது. இந்த உண்மையை மறைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்ப்பது பொருத்தமற்றது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
எனவே, கோவையை சூழ்ந்து வருகிற இந்த போதை சார்ந்த வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும், போதை கலாச்சாரத்தை முற்றாக ஒழிப்பதற்கும் காவல்துறை முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லூரி நிர்வாகங்கள் பணம் குவிக்கும் நோக்கத்தோடு மாணவர்களை சேர்க்காமல், சமூக பொறுப்புணர்வு கொண்ட குடிமக்களாக மாணவர்களை உருவாக்கிட வேண்டும் என்கிற சமூக அக்கறையுடன் கல்வி நிர்வாகங்கள் நடந்து கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.