கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு: கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

கைதான 3 பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு: கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

கோவை,

கோவை விமான நிலையம் அருகில் கடந்த மாதம் 2-ந் தேதி கல்லூரி மாணவி கடத்தி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சகோதரர்களான கருப்பசாமி என்ற சதீஷ், கார்த்திக் என்ற காளீஸ்வரன், மற்றும் மதுரையை சர்ந்த வாலிபர் தவசி என்ற குணா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை பீளமேடு போலீசார் அவர்களை காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தற்போது கோவை மத்திய சிறையில் அவர்கள் 3 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். கைதான 3 பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கில் கோர்ட்டில் விசாரணை தொடங்க உள்ளது.

இவர்கள் கூட்டு பாலியல்பலாத்கார சம்பவத்துக்கு முன்பு, கோவையை அடுத்த கோவில்பாளையத்தில் ஆடு மேய்த்த ஒருவரை கொலை செய்துவிட்டு விமானநிலைய பகுதிக்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த இவர்கள் 3 பேர் மீது திருப்பூர் மாவட்டத்திலும், கோவை, கிணத்துக்கடவு பகுதிகளிலும் கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் சிறைக்கு சென்று ஜாமீனில் விடுதலையான இவர்கள் கோவை இருகூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த 3 பேர் மீதும் தற்போது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதற்கான உத்தரவு நகல் கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை துரிதப்படுத்தி குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு விரைவில் தண்டனை பெற்று கொடுக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com