கோவை மாணவர் கொலை வழக்கு: கைது எண்ணிக்கை மேலும் உயர்வு

மாணவர் கொலை செய்யப்பட்ட புகாரின் பேரில், செட்டிபாளையம் போலீசார் 14 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை மாணவர் கொலை வழக்கு: கைது எண்ணிக்கை மேலும் உயர்வு
Published on

கோவை,

கோவை தனியார் கல்லூரியில் சக மாணவர்களால் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர் கொலை

கள்ளக்குறிச்சி வடக்கனந்தல் பகுதியை சேர்ந்தவர் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த 10-ந்தேதி அமுதனை சக மாணவர்கள் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

மாணவர்களுக்கு இடையேயான மோதலில் அமுதன் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், போதைப்பொருள் விவகாரம் தொடர்பாகவே தனது மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அமுதனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இந்த போதைப்பொருள் குற்றச்சாட்டை கோவை மாவட்ட போலீசாரும் கல்லூரி நிர்வாகமும் மறுத்துள்ளன.

வழக்குப்பதிவு

இதனிடையே, அமுதனின் பெற்றோரை தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமுதனின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இச்சம்பவம் குறித்து நாளை ( திங்கள்கிழமை) சட்டப்பேரவையில் விரிவாக பேசவிருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அமுதனின் நண்பர் அளித்த புகாரின் பேரில், செட்டிபாளையம் போலீசார் 14 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி கலவரத்தில் ஈடுபடுதல், சட்டவிரோதமாக வழிமறித்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், கடத்தல், கொலை முயற்சி, கொலை ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது ‘தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு’ கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

10 பேர் கைது

இவ்வழக்கை விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஏற்கனவே 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தேனியைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவரும் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. தலைமறைவாக இருந்த மேலும் 4 மாணவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

மேலும் 4 பேர் கைது

இந்நிலையில் கோவை மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக கள்ளக்குறிச்சி வடக்கனந்தலில் உள்ள அமுதன் குடும்பத்தினரை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து சமூக நீதித்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் முதற்கட்டமாக ரூ.6 லட்சம் நிதியுதவிக்கான ஆணையை அமுதனின் பெற்றோரிடம் அமைச்சர்கள் வழங்கினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com