கோவை மாணவர் கொலை சம்பவம்: உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை

போதைப்பொருட்களை கட்டுப்படுத்த அரசு இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாணவர் கொலை சம்பவம்: உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை
Published on

கோவை,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“கோவை தனியார் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் தங்கி மெக்கானிக்கல் படித்து வந்த மாணவன் அமுதனை நேற்று முன்தினம் அதே கல்லூரியை சேர்ந்த இருவருக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி மைதானம் அருகே கத்தியால் குத்தியும், இரும்புராடல் அடித்தும் கொலை செய்துள்ளனர்.

இக்கொலை சம்பவத்திற்கு காரணம் கல்லூரி அருகே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் அதிக அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. போலீஸ் தரப்போ இது கோஷ்டி மோதல் என்று கூறுகிறது. மொத்தத்தில் போதைப் பொருளும் இருந்துள்ளது, கோஷ்டி மோதலும் கலந்துள்ளது. கோஷ்டி மோதல் போதை வஸ்துகளால் வந்தது. இதுதான் அங்கு நிலவும் உண்மையாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அமைதி மண்டலமாக திகழும் கொங்கு மண்டலத்தில் இதுபோன்ற செய்திகள் எல்லாம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தொழிலுக்கு பெயர் போன நகரம் கோவை. அது மட்டுமின்றி மருத்துவத்துறையில் இன்று உலக அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து ஏன் பல்வேறு மிக முக்கியஸ்தர்கள் எல்லாம் நல்ல மருத்துவம் எடுத்துக் கொள்ளும் நகரமாக கோவை உருவாகி உள்ளது. இது போன்ற செயல்களெல்லாம் கோவை நகரத்திற்கு தொழில் முனைவோர்கள் வருவதை தடுக்கும் செயலாக அமையும்.

எந்த செயல் நடந்தாலும் இதில் இருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்ளலாம் என்ன காரணங்களை சொல்லலாம் என்று காவல்துறையும், அரசும் யோசித்து முடிவு எடுப்பதை தவிர்த்து விட்டு இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு எவ்வாறு அடக்கலாம் என்ற சிந்தனை மேலோங்கி இருந்தால் தான் குற்றங்களை தடுக்க இயலும்.

கல்லூரி மாணவன் அமுதன் கொலையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதனை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமைதி பூங்காவன கொங்கு மண்டலம் குறிப்பாக கோவை தனது தன்மையை இழக்க வேண்டிய அவல நிலை ஏற்படும். எந்த விஷயம் என்றாலும் பேசுவது எளிது அதன் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து காட்டுவதுதான் உண்மையான தலை சிறந்த அரசாங்கம்.

ஆகையால் முதல்-அமைச்சர் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவன் உயிரிழப்புக்கு முறையான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும். மேலும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த அரசு இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com