மின்சார வாகன உற்பத்தி மையமாகும் ‘கோவை’... தொழில் துறையில் மேலும் ஒரு மைல்கல்


மின்சார வாகன உற்பத்தி மையமாகும் ‘கோவை’... தொழில் துறையில் மேலும் ஒரு மைல்கல்
x

இந்தியாவின் ஆட்டோ மொபைல் தேவையை தமிழ்நாடு தான் அதிகம் பூர்த்தி செய்து வருகிறது.

கோயம்புத்தூர்

கோவை,

தமிழ்நாட்டின் தொழில் நகரமாக இருக்கும் கோவை மாவட்டம் ஜவுளி, மோட்டார் பம்பு, கிரைண்டர் உற்பத்திகளில் சிறந்து விளங்கி வருகிறது. கல்வி, மருத்துவத்திலும் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை வளர்ச்சி பெற்றுள்ளது. அத்துடன் தனியார் ஐ.டி. நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தற்போது மின்சார வாகன உற்பத்தி மையமாக கோவை மாறி வருகிறது. கோவை அருகே அரசூரில் மின்சார வாகன உற்பத்தி கிளஸ்டர்(பூங்கா) 500 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. ஏற்கனவே சூலூர் பகுதியில் மின்சார வாகனங்களுக்கான உதிரி பாக உற்பத்தி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆனால் மின்சார வாகனங்களுக்கான மோட்டார்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் இன்னும் 10 ஆண்டுகளில் சாலைகளில் அதிகம் ஓடப்போவது மின்சார வாகனங்கள் தான். இதனால் அதன் தேவை வரலாறு காணாத அளவிற்கு அதிகரிக்க உள்ளது.

அதே நேரத்தில், மின்சார வாகன தொழிற்சாலைகள் அனைத்தையும் தமிழ்நாட்டில் அமைக்கவே விரும்புகின்றனர். இந்தியாவின் ஆட்டோ மொபைல் தேவையை தமிழ்நாடு அதிகம் பூர்த்தி செய்து வரும் நிலையில், மின்சார வாகனங்கள் தேவையையும் இனி தமிழ்நாடு தான் பூர்த்தி செய்ய உள்ளது. அதிலும் கோவை முக்கிய இடத்தை பிடிக்க இருக்கிறது.

தற்போது கோவையில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்காக மோட்டார்களை தயாரிக்க தொடங்கி உள்ளன. தரமான மோட்டார்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதற்காக சீமா, கொடிசியா, கோ-இண்டியா ஆகியவை இணைந்து சிடார்க் மூலம் தமிழக அரசின் நிதி உதவியுடன் தொழில்நுட்ப ஆய்வகத்தை அமைக்க உள்ளது. ரூ.10 கோடியில் குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் சிடார்க்-இ.வி. மையம் அமைய உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

முதற்கட்டமாக இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கான மோட்டார்கள் மற்றும் கட்டுப்படுத்திகளின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளில் இது தொடர்பாக பல பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப திறன், செயல்பாட்டு திறன் மற்றும் வளரும் பொறியாளர்கள், திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணி அடுத்த மாதம்(அக்டோபர்) இறுதியில் தொடங்கப்படும்.

2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு வரும். இது சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு உதவிகரமாக அமையும். உலக சந்தையில் திறம்பட போட்டியிட உதவும். அதே நேரத்தில் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கும், மின்சார இயக்க தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் நிலையான உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் இந்த மையம் உதவும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தற்போது மின்சார வாகனங்கள் உற்பத்தியில் வடமாநிலங்கள் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், கோவை வரும் காலங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்த உள்ளது. இது கோவை தொழில் வளர்ச்சியில் மேலும் ஒரு மைல்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story