கோவை: காலில் விழுந்த சம்பவம், புதிய வீடியோவால் திடீர் திருப்பம்

கோபிராசிபுரத்தை சேர்ந்த கோபால்சாமி என்பவர் பட்டா பெயர் மாற்றத்திற்காக ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்தார்.
கோவை: காலில் விழுந்த சம்பவம், புதிய வீடியோவால் திடீர் திருப்பம்
Published on

கோவை,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக கலைசெல்வியும், உதவியாளராக அந்த பகுதியை சேர்ந்த முத்துசாமியும் பணிபுரிகின்றனர்.

ஒட்டர்பாளையம், கோபிராசிபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பட்டா பெயர் மாற்றம், சிட்டா உள்ளிட்ட ஆவணங்களுக்காக இந்த அலுவலகத்திற்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் கோபிராசிபுரத்தை சேர்ந்த கோபால்சாமி என்பவர் பட்டா பெயர் மாற்றத்திற்காக ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது அங்கு கிராம நிர்வாக அலுவலர் கலைசெல்வி, உதவியாளர் முத்துசாமி (வயது 56) ஆகியோர் பணியில் இருந்தனர். கோபால்சாமி அளித்த ஆவணங்களை வாங்கி கலைச்செல்வி சரி பார்த்தார். அதன்பின்னர் போதிய ஆவணங்கள் இல்லை, இன்னும் கூடுதல் ஆவணங்களை கொண்டு வரும்படி அவரிடம் தெரிவித்து உள்ளார்.

இதற்கு கோபால்சாமி ஆட்சேபம் தெரிவித்து, கிராம நிர்வாக அலுவலர் கலைசெல்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், கலைசெல்வியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து கொண்டிருந்த உதவியாளர் முத்துசாமி, கிராம நிர்வாக அலுவலரை தரக்குறைவாக பேச வேண்டாம், அவர் ஒரு அரசு அதிகாரி, அவரை திட்டுவது சரியல்ல என்று கூறியுள்ளார்.

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் உதவியாளர் முத்துசாமி, கோபால்சாமியை தள்ளியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், முத்துசாமியை பார்த்து என்னை எதிர்த்து பேசியதுடன், தள்ளிவிட்டாயா, நான் நினைத்தால் இப்போதே இந்த வேலையில் இருந்து உன்னை தூக்கி விட முடியும் என்று மிரட்டும் தோனியில் பேசியுள்ளார். மேலும் தன்னிடம் மன்னிப்பு கேட்கும்படி முத்துசாமியை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த முத்துசாமி வேறுவழியின்றி கோபால்சாமி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அப்போது அவரது 2 கால்களையும் பிடித்தப்படி மன்னிப்பு கேட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர் கலைசெல்வி, உதவியாளர் முத்துசாமியை பார்த்து இது தவறு எந்திரியுங்கள், இவ்வாறு செய்யாதீர்கள் என்று கூறினார். ஆனால் முத்துசாமி எழுந்து மீண்டும் கோபால்சாமி காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்.

மேலும் அங்கிருந்த நபர்களும் முத்துசாமியின் கைகளை பிடித்து தூக்க முயன்றனர். அப்போது, கோபால்சாமி தனது காலில் விழுந்த முத்துசாமியை பார்த்து மன்னித்து விட்டேன், உன்மீதும் தவறு உள்ளது, என்மீதும் தவறு உள்ளது என்று கூறினார்.

கிராம உதவியாளர் முத்துசாமி, ஒருவரின் காலில் விழும் காட்சிகளை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

இந்த வீடியோ மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட வருவாய் அதிகாரி லீனா அலெக்ஸ், போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு செல்வ நாகரத்தினம் தனியாகவும், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தனியாகவும் விசாரணை மேற்கொண்டனர்.

விவசாயி கோபால்சாமியையும், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துச்சாமியையும் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விவசாயி கோபால்சாமி தன்னை கிராம உதவியாளர் முத்துச்சாமி தாக்கியதாக கூறினாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும், அதேவேளையில் கிராம உதவியாளர் முத்துச்சாமி கோபால்சாமியின் காலில் விழுந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒரு வழக்கும், கிராம உதவியாளர் முத்துச்சாமி கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை வழக்கு மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் என்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அடித்த முத்துசாமியை விட்டுவிட்டு கோபால்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும் இது குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரியும், கோபால்சாமியின் சொந்த கிராமமான கோபிராசிபுரம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களது ஊர்களில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்

இந்நிலையில் இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக விவசாயி கோபால்சாமியை, கிராம உதவியாளர் முத்துச்சாமி கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து தாக்கி கீழே தள்ளிவிடும் காட்சிகள் வெளியானது.

தற்போது வெளியியாகியுள்ள அந்த வீடியோ ஆதாரம் இவ்விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பட்டியலின சமூகத்தை சேர்ந்த முத்துசாமியை, மாற்று சமூகத்தை சேர்ந்த கோபால்சாமி அவதூறாக எதுவும் பேசவில்லை என்பதுடன், இந்த விவகாரத்தை வேண்டுமென்று திட்டமிட்டு சாதி ரீதியாக தவறாக சித்தரித்தது தெரிய வருகிறது.

இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கு உட்பட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் எனவும், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் போலீசாரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் புதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் அவரது உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், விசாரணையின் மீது தவறான தகவல்களை அளித்ததால் குற்றவியல் நடவடிக்கை மற்றும் ஒழுங்கீனமாக செயல் பட்டதற்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com